எடப்பாடி அருகே ஓட்டுநர் பழகுநர் உரிமம் பெற சிறப்பு முகாம்
By DIN | Published On : 04th January 2019 08:49 AM | Last Updated : 04th January 2019 08:49 AM | அ+அ அ- |

எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி கிராமத்தில் ஓட்டுநர் பழகுநர் உரிமம் பெறுவதற்கான சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்டத்தின் கடைகோடி பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அவர்கள் நீண்ட தொலைவு பயணம் செய்து ஓட்டுநர் உரிமம் பெறும் சிரமத்தைத் தவிர்க்கும் நோக்கிலும், தமிழக போக்குவரத்துத் துறையின் சார்பாக பல்வேறு சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒருபகுதியாக, சேலம் மாவட்ட மேற்கு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பூலாம்பட்டி கிராமத்தில், வியாழக்கிழமை மாலை சிறப்பு முகாம் நடைபெற்றது.
சங்ககிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தினர் ஏற்பாடு செய்திருந்த இம்முகாமில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட சேலம் சரக போக்குவரத்துத் துறை துணைக் கண்காணிப்பாளர் சத்தியநாராயணன் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த பல்வேறு குறிப்புகளை வழங்கினார்.
மேலும் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவத்தையும், மது அருந்திய நிலையில் வாகனங்களை ஓட்டுவதால் ஏற்படும் தீய்மைகள் குறித்தும் விளக்கினார். தொடர்ந்து நடைபெற்ற
நிகழ்ச்சியில், புதிதாக ஓட்டுநர் பழகுநர் உரிமம் கோரி விண்ணப்பித்த நபர்களின் ஆவணங்கள் சரிபார்த்து, ஆன்லைன் மூலம் 183 பயனாளிகளுக்கு முகாமிலேயே உரிமங்கள் வழங்கப்பட்டன. மேலும், அடுத்த 30 அரசு வேலை நாள்களுக்கு பிறகு பயனாளிகளின் கிராமத்துக்கே சென்று, பழகுநரின் திறன் ஆய்வு செய்யப்பட்டு புதிய ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கூறினர்.
முகாமில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அங்கமுத்து, போக்குவரத்து ஆய்வாளர்கள் விஸ்வநாதன், தனபால் உள்ளிட்ட போக்குவரத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.