ஓய்வு பெற்ற வட்டாட்சியர் வீட்டில் 50 பவுன் தங்க நகை திருட்டு
By DIN | Published On : 04th January 2019 08:49 AM | Last Updated : 04th January 2019 08:49 AM | அ+அ அ- |

சேலத்தில் ஓய்வுபெற்ற வட்டாட்சியர் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் தங்க நகை மற்றும் பணத்தை திருடிய நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
சேலம் கன்னங்குறிச்சி பிரகாசம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். வட்டாட்சியராகப் பணியாற்றிய ஓய்வு பெற்ற இவர், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். இதையடுத்து மனைவி நீலாம்பாள் மட்டும் தனியே வீட்டில் வசித்து வந்தார்.
இதனிடையே, நீலாம்பாள் கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி மங்களூருவில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். வீடு பூட்டி இருந்த நிலையில், பணிப்பெண் சிட்டம்மாள் தினமும் வந்து வீட்டின் வெளிப்புறத்தை சுத்தம் செய்து விட்டு செல்வார். இந்தநிலையில் வியாழக்கிழமை சுத்தம் செய்வதற்காக சிட்டம்மாள் வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து கன்னங்குறிச்சி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், பெங்களூருவில் உள்ள நீலாம்பாள் மகனை வரவழைத்து இந்த திருட்டு குறித்து ஆய்வு நடத்தியதில் 50 பவுன் தங்க நகை மற்றும் ரூ.30ஆயிரம் ரொக்கம் திருட்டு போனது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இளைஞரிடம் வழிப்பறி செய்த இருவர் கைது
வாழப்பாடி, ஜன.3: வாழப்பாடியில் இளைஞரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீஸார் கைது செய்தனர்.
வாழப்பாடி கிழக்குக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பழ வியாபாரி அன்பழகன் மகன் அருண்குமார் (22). வியாழக்கிழமை காலை, மன்னாயக்கன்பட்டி பிரிவு சாலை அருகே நின்றிருந்த போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், இவரிடம் இருந்த பணப் பையைப் பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து அருண்குமார் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த வாழப்பாடி போலீஸார், இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக வாழப்பாடியை அடுத்த நடுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய தொப்பி ஆறுமுகம் மற்றும் சின்னமநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த சேட்டு ஆகிய இருவரையும் கைது செய்தனர். வாழப்பாடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். வழிப்பறிக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.