சேலம் மாநகராட்சியில் 94 கடைகளில் 1,480 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்
By DIN | Published On : 04th January 2019 08:50 AM | Last Updated : 04th January 2019 08:50 AM | அ+அ அ- |

சேலம் மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் 94 கடைகளில் 1480 கிலோ அளவிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழக அரசின் ஆணைப்படி ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய மக்காத தன்மை கொண்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதை, விற்பனை செய்வதைத் தடுக்க, சேலம் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் 5 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, தொடர் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சேலம் மாநகராட்சியின் 4 மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு குழுவினர் இனிப்பகங்கள், உணவகங்கள், பேக்கரிகள், மொபைல் கடைகள், தேநீர் விடுதிகள், துணிக் கடைகள், உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் திடீர் தணிக்கை மேற்கொண்டனர்.
இந்தத் தணிக்கையில் சூரமங்கலம் மண்டலத்தில் 30 கடைகளில் 500 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்து ரூ.15 ஆயிரம் அபராதமும், அஸ்தம்பட்டி மண்டலத்தில் 18 கடைகளில் 150 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்து ரூ.26 ஆயிரம் அபராதமும், அம்மாபேட்டை மண்டலத்தில் 17 கடைகளில் 200 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்து ரூ.19 ஆயிரம் அபராதம் மற்றும் கொண்டலாம்பட்டி மண்டலத்தில் 29 கடைகளில் 630 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்து ரூ.14 ஆயிரத்து 300 அபராதம் என மொத்தம் 94 கடைகளில் 1480 கிலோ அளவிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்களிடமிருந்து ரூ.74 ஆயிரத்து 300 அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்தக் காண்காணிப்பு குழுவினர் தினந்தோறும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்துக் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களிலும் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதை, விற்பனை செய்வதைத் தடுக்க, தொடர்ந்து தணிக்கை மேற்கொள்வார்கள் என ஆணையாளர் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளார்.