அதிகாலை நேரத்தில் சிறுவர்-சிறுமியர் நடத்தும் மார்கழி வழிபாடு: பேளூரில் மரபு மாறாமல் நடைபெறும் சைவ-வைணவ நல்லிணக்க ஊர்வலம்

வாழப்பாடியை அடுத்த பேளூரில் முன்னோர்கள் வழியில் மரபு மாறாமல் மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை

வாழப்பாடியை அடுத்த பேளூரில் முன்னோர்கள் வழியில் மரபு மாறாமல் மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை நேரத்தில் எழும் சிறுவர் -சிறுமியர், இறைவனை புகழ்ந்து பாடியபடி தினந்தோறும் சிவன் மற்றும் பெருமாள் கோயிலுக்கு ஊர்வலமாக சென்று, வேறெந்த பகுதியிலும் இல்லாத வகையில் இன்றளவும் சைவ-வைணவ மத நல்லிணக்க ஆன்மிக வழிபாடு நடத்தி வருகின்றனர். 
ஊர்வலமாக வரும் சிறுவர்-சிறுமியரை இறைவனின் தூதுவர்களாகக் கருதி பொதுமக்களும், பக்தர்களும் வழிபட்டு வருகின்றனர்.
வாழப்பாடியை அடுத்த பேளூர்,  புராண காலத்திலேயே வேள்வியூர் என்ற பெயரில் மிகச்சிறந்த ஆன்மிக தலமாக விளங்கியுள்ளது. கல்வெட்டுகளும், புராணங்களும் இதனை உறுதிபடுத்துகின்றன. ராமரின் தாகம் தீர்க்க வசிஷ்டர் அருளியதாகக் கருதப்படும் வசிஷ்ட நதிக் கரையில் அமைந்துள்ள பேளூரில், பஞ்சபூத சிவன் திருத்தலங்களில் முதல் தலமான தான்தோன்றீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. 
5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாகப் போற்றப்படும் இந்தக் கோயிலில், சகல தோஷம் நீக்கும் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளதால், தமிழகத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர். இதேபோன்று வசிஷ்ட நதியின் மறுகரையில், அஷ்டபுஜ பால மதன வேணுகோபால ஸ்வாமி என்ற பெயரில் பழமையான மிக பிரமாண்டமான பெருமாள் கோயிலும் பேளூரில் அமைந்துள்ளது. 
இறை வழிபாட்டுக்கு உகந்த மாதமாகக் கருதப்படும் மார்கழி மாதத்தில், அதிகாலை நேரத்தில் எழும் சிறுவர்-சிறுமியர், பெருமாள் கோயிலில் கூடி ஸ்வாமியின் திருப்பாவை, திருவெம்பாவை புகழ்பாடி, பாரம்பரிய முறைப்படி சங்கு ஊதி வழிபாடு நடத்துவதும், பின்னர் அங்கிருந்து சிவனை போற்றியபடி ஊர்வலமாக தான்தோன்றீஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்துவதும், மீண்டும் பெருமாள் கோயிலுக்கு சென்று ஊர்வலத்தை நிறைவு செய்வதும், மரபு மாறாமல் முன்னோர்கள் வழியாக இன்றளவும் தொடர்ந்து வருகிறது. 
தமிழகத்தின் வேறெந்த பகுதியிலும் இல்லாத வகையில், பல நூறாண்டுகளாக சைவ-வைணவ மத நல்லிணக்கத்தைப் பறைசாற்றும் வகையில் தொடர்ந்து வரும் இந்த வினோத வழிபாட்டு ஆன்மிக ஊர்வலத்தைக் காத்திருந்து காணும் பொதுமக்களும், பக்தர்களும், வழிநெடுக கோலங்களை வரைந்து வைத்து, சிறுவர்-சிறுமியரை வரவேற்று இறைவனின் தூதுவர்களாகக் கருதி வழிபடுவது குறிப்பிடத்தக்கதாகும்.
நாகரிகம், பண்பாடு, கலாசாரம் மற்றும் கல்வி முறையில் நினைத்துப் பார்க்க முடியாத மாற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், நிகழாண்டும் நடுங்கும் குளிரில் அதிகாலை நேரத்தில் விழித்தெழுந்து, 19 நாள்களாக இடைவிடாது மார்கழி வழிபாட்டு ஊர்வலத்தைத் தொடர்ந்து வரும் பேளூர் சிறுவர்-சிறுமியருக்கு, சைவ-வைணவ வழிபாட்டுக் குழுவினர் மற்றும் ஆன்மிக அன்பர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com