பிளாஸ்டிக் பையை தவிர்த்து துணிப்பை தயாரிக்க மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்: ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ்

பிளாஸ்டிக் பையைத் தவிர்த்து துணிப்பைதயாரிக்க மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தெரிவித்தார்.

பிளாஸ்டிக் பையைத் தவிர்த்து துணிப்பைதயாரிக்க மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தெரிவித்தார்.
சேலம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் சார்பில் மகளிர் தொழில் முனைவோர்களுக்கான விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமை  மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் துவக்கி வைத்துப் பேசியதாவது:
பெண்கள் எதிர்காலத்தில் தொழிலதிபராக மாற என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த விழிப்புணர்வு முகாம் மூலமாக அறிய முடியும். அதற்கு தேவையான அனைத்துத் திறமைகளும் உங்களிடம் உள்ளது. வியாபாரம் என்றால் ஆண்கள் மட்டும்தான் செய்ய முடியும்  என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். பெண்களும் வியாபாரம்  செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.   உதாரணமாக  மிக முக்கிய அலுவலகங்களின் நிர்வாகிகள் பெண்கள்தான்.பெப்சிகோ போன்ற மிகப் பெரிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தமிழ்நாட்டைச் சார்ந்த இந்திரா நூயி ஆவார். தமிழ்நாட்டில் பிறந்த அவர்  தொடர்ந்து பொறுப்பில் இருந்து வருகிறார்.
கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி  முதல் பிளாஸ்டிக் இல்லா தமிழகமாக மாற்றப்பட்டுள்ள நிலையில்,  பிளாஸ்டிக் பையைத் தவிர்த்து துணிப்பை தயாரிக்க மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.   சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் இது மாதிரியான பயிற்சி அளிக்கப்படுகிறது. மாணவர்களாகிய நீங்கள் கல்வி கற்கும்போது உள்ளுக்குள் என்ன படிக்க வேண்டும் என்பதை ஆராய்ந்து படிக்க வேண்டும். ஆராய்ந்த பிறகு திறன் மேம்பாட்டுப் பயிற்சி மேற்கொண்டு நாம் செய்யும் தொழில், உற்பத்தி செய்யும் பொருள்களை எவ்வாறு சந்தைப்படுத்துவது என்பது குறித்தும்,  எந்த விதமான பொருள்களுக்கு சந்தையில் வரவேற்பு உள்ளது என்று ஆராய்ந்து செய்ய வேண்டும். 
தற்போது தமிழக அரசு பல்வேறு தொழிலுக்கு மானியத்துடன் கடன் வழங்கி வருகிறது. அதன் மூலம் கடன் பெற்று  உங்கள் தொழிலை மேம்படுத்த வேண்டும். 
மேலும்,  இந்திய ஆட்சிப் பணியாளராக நேரடியாக ஆக முடியாது. முதலில் கிராம நிர்வாக அலுவலர் பயிற்சி பெற்று வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், சார்-ஆட்சியர் என  பயிற்சி பெற்று  படிப்படியாக உயர்ந்து ஆட்சியராகப் பணி செய்ய முடிகிறது. உங்களுக்கு தன்னம்பிக்கை மிக முக்கியமானதாகும். கடினமாக முயற்சி செய்து
தன்னம்பிக்கை கொண்டால் நம் இலக்கை அடைய முடியும். எனவே, இந்த மகளிர் தொழில் முனைவோர்களுக்கான விழிப்புணர்வு முகாமை பயன்படுத்திக்கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என்றார். 
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் பி.ரங்கனாதன், பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ஏ.சிவனேசன் மற்றும் ஏராளமான அலுவலர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com