கால்நடை சந்தைகளுக்கான தடை விலக்கிக் கொள்ளப்படுகிறது: ஆட்சியர்
By DIN | Published On : 07th January 2019 08:34 AM | Last Updated : 07th January 2019 08:34 AM | அ+அ அ- |

சேலம் மாவட்டத்தில் கால்நடை சந்தைகளை செயல்படுத்துவது தொடர்பான தடை விலக்கிக் கொள்ளப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தெரிவித்துள்ளார்.
கால்நடைகளுக்கு கோமாரி நோய் பரவியதால் கால்நடை சந்தைகளுக்கு ஜனவரி 5 ஆம் தேதி வரை அனுமதி மறுக்கப்பட்டது.
தற்போது நோய் தாக்கம் குறைந்து கட்டுப்பாட்டில் உள்ளதால் சேலம் மாவட்டத்தில் கால்நடைச் சந்தைகளை செயல்படுத்துவது தொடர்பான தடை விலக்கிக் கொள்ளப்படுகிறது.
எனவே, தற்போது செயல்படவுள்ள கால்நடை சந்தைகளில் கீழ்க்கண்ட பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். கால்நடை சந்தைகளின் நுழைவாயில் மற்றும் வெளியில் செல்லும் வாயில்களில் கிருமி நாசினிகள் கலந்த நீரில் கால் குளியில் முறை அமைக்க வேண்டும்.
கால்நடை சந்தைகளில் பிளீசிங் பவுடர் தெளிக்க வேண்டும். சந்தை கூடும் நாளுக்கு முந்தைய தினம் சந்தை வளாகத்தை 4 சதவீதம் சோடியம் கார்பனேட் அல்லது 4 சதவீதம் சோடியம் ஹைட்ராக்சைடை நன்றாக தெளிக்க வேண்டும். (400 மில்லி மருந்தை 10 லிட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும்).
மேலும், 10 சதவீதம் சோடியம் கார்பனேட் அல்லது 4 சதவீதம் சோடியம் ஹைட்ராக்சைடு கொண்டு கால்நடைகள் ஏற்றி வரும் வாகனங்களின் சக்கரங்கள் மற்றும் அடிப்பகுதியில் படும்படி தெளிக்க வேண்டும்.
கால்நடைகளின் கழிவுகள், சானம், தீவனக் கழிவுகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு சந்தையின் ஓரத்தில் ஆழமான குழியில் சுண்ணாம்புத் தெளித்து முறையாக மூட வேண்டும். இதை உள்ளாட்சி நிர்வாகம், கால்நடை சந்தைகள் நடக்கும் அனைத்து இடங்களிலும் எவ்வித தொய்வும் இன்றி செய்ய வேண்டும்.
பிற மாநிலம், மாவட்டங்களில் இருந்தும் சந்தைக்கு கால்நடைகள் கொண்டுவருவதை வியாபாரிகள் தவிர்க்க வேண்டும். கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் கால்நடைகளின் உடல்நலம் தகுதியை உறுதிப்படுத்துவதோடு சிகிச்சை பணிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
சந்தைகளுக்கு கொண்டுவரப்படும் கால்நடைகளில் நோய் தொற்று மிகுதியாக உள்ளவை சந்தைகளுக்கு அதிகளவில் வருவதாக அறியப்பட்டால் கால்நடை சந்தைகளை மீண்டும் நிறுத்தி வைக்கும் பொருட்டு அந்த தகவலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு உடனடியாக தெரிவித்திட உள்ளாட்சி மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்படுகிறது என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.