இடங்கணசாலை பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
By DIN | Published On : 03rd July 2019 10:07 AM | Last Updated : 03rd July 2019 10:07 AM | அ+அ அ- |

சேலம் மாவட்டம், இளம்பிள்ளையை அடுத்த இடங்கணசாலை பேரூராட்சி அலுவலகத்தை பெண்கள் குடிநீர் கேட்டு காலி குடத்துடன் முற்றுகையிட்டனர்.
இடங்கணசாலை பேரூராட்சிக்குள்பட்ட 12 வார்டு மேற்கு புளியம்பட்டி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு போதிய குடிநீர் வசதி இல்லாததால் கடந்த 2 மாதத்துக்கு முன்பு ஆழ்துளை கிணறு அமைக்கக் கோரிக்கை மனு அளித்தனர்.
இந்த மனு மீது இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாததால் ஆவேசமடைந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடத்துடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் மகுடஞ்சாவடி காவல் நிலைய எஸ்.ஐ. சபாபதி மற்றும் போலீஸார் நிகழ்விடம் வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் அப்பகுதியில் ஆய்வு செய்து தண்ணீர் கிடைக்க வழிவகை செய்யப்படும் என உறுதியளித்த பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.