குடிநீர் பற்றாக்குறையைத் தீர்க்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 03rd July 2019 10:02 AM | Last Updated : 03rd July 2019 10:02 AM | அ+அ அ- |

குடிநீர் பற்றாக்குறையைத் தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாநகர் குழுக்கள் சார்பில் ஏராளமானோர் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.
இதுதொடர்பாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பரமசிவம் கூறியதாவது:
தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மக்கள் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் பல மாவட்டங்களில் கடுமையான சிரமத்திற்கு ஆளாகின்றனர். மழை பெய்யாத நிலையில் தண்ணீர் தேவையை போக்க தமிழக அரசு திட்டமிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தால் இதுபோன்ற மோசமான நிலை ஏற்பட்டு இருக்காது.
மேட்டூரில் இருந்து வரும் உபரி நீரை சேலம் மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தாலும் அரசு இந்தத் திட்டத்தை இதுவரை நிறைவேற்றவில்லை.
எனவே, அந்தத் திட்டத்தை உடனடியாக அரசு நிறைவேற்றி சேலம் மாவட்டத்தின் தண்ணீர் பற்றாக்குறையைப் போக்க வேண்டும். பல்வேறு இடங்களில் நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும். மாநகர் பகுதி முழுவதும் சீராக குடிநீர் வழங்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தம்மம்பட்டியில்...
தம்மம்பட்டி பேரூராட்சியில் வாரத்தில் இரண்டு நாள்களுக்கு ஒருமுறை கட்டாயம் குடிநீர் விநியோகிக்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தம்மம்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு நகரச் செயலாளர் நாகராஜ் தலைமை வகித்தார். கட்சியின் நிர்வாகிகள் ஷாஜகான், மாவீரன், சந்திரா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டக் குழுவைச் சேர்ந்த அருணா, பழனிமுத்து, சீனிவாசன் ஆகியோர் பேசினர். காந்திநகரில் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டிக் கொடுக்க வேண்டும், தம்மம்பட்டி பேரூராட்சியில் வாரத்தில் இரண்டு நாள்களுக்கு ஒரு முறை கட்டாயம் தண்ணீர் விநிநோயகம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தம்மம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரமூர்த்தியிடம், கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது. மனுவைப் பெற்ற அவர், உடன் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.