சேதமடைந்த கட்டடம் அகற்றப்படுமா?
By DIN | Published On : 03rd July 2019 10:04 AM | Last Updated : 03rd July 2019 10:04 AM | அ+அ அ- |

சங்ககிரி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள சேதமடைந்துள்ள தார்சு கட்டடத்தை அகற்ற வேண்டுமென சமூக ஆர்வலர்கள் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சங்ககிரி வட்டாட்சியர், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்குள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் நுழைவு பகுதியில் வடக்குப் புறத்தில் உள்ள தார்சு கட்டடம் விரிசல் ஏற்பட்டும், மேல்பகுதி சிதலமைடந்தும் உள்ளன. இந்தக் கட்டடத்திற்குள் பழைய பொருள்கள் கிடப்பதால் மழைநீர் கசிந்து அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. அக் கட்டடம் அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள், பணிபுரியும் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி வருகின்றனர். அலுவலக நுழைவு பகுதியில் உள்ள சேதமடைந்த கட்டடத்தை ஆபத்து ஏற்படும் முன் அகற்றி பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு சமூக ஆர்வலர்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.