சேலம் பேருந்து நிலையங்களில் மின் விளக்குகள் எரிவதில்லை என புகார்
By DIN | Published On : 03rd July 2019 10:03 AM | Last Updated : 03rd July 2019 10:03 AM | அ+அ அ- |

சேலம் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களில் மின் விளக்குகள் எரிவதில்லை எனவும், அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் சேலம் மாவட்ட மதசார்பற்ற ஜனதாதளம் தலைவர் ஜி.வேலாயுதம் மனு அளித்தார்.
சேலத்தில் வாராந்திர குறைதீர் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் சி. அ. ராமன் தலைமை வகித்தார்.
கூட்டத்துக்கு வந்த சேலம் மாவட்ட மதசார்பற்ற ஜனதாதளம் தலைவர் ஜி.வேலாயுதம் ஆட்சியர் சி.அ. ராமனிடம் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: சேலம் மாநகரம் வாசவி மஹால் சுற்றியுள்ள காய்கறி கடைகளில் அடிக்கடி குப்பை எடுக்காத காரணத்தினால் அசுத்தமாகவும், துர்நாற்றமும் வீசுகிறது. இதனால் மலேரியா, காலரா போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
சேலம் புதிய , பழைய பேருந்து நிலையங்களில் மின் விளக்குகள் சரியாக எரிவதில்லை. மேலும் கழிப்பிட வசதி இருந்தும் சுத்தம் செய்யப்படாத நிலையில் உள்ளது. எனவே இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் தெரிவித்துள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...