ஜிஎஸ்டி வருவாய் பிரதிமாதம் ரூ. 1 லட்சம் கோடியை எட்டியுள்ளது: முதன்மை ஆணையர் எஸ்.கண்ணன்
By DIN | Published On : 03rd July 2019 10:05 AM | Last Updated : 03rd July 2019 10:05 AM | அ+அ அ- |

ஜிஎஸ்டி வருவாய் பிரதி மாதம் ரூ. 1 லட்சம் கோடியை எட்டியுள்ளதாக மத்திய கலால், சுங்கம் மற்றும் சேவை வரி முதன்மை ஆணையர் எஸ். கண்ணன் தெரிவித்தார்.
ஜிஎஸ்டி வரித் திட்டம் அமல்படுத்தப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி சேலம் மத்திய ஜிஎஸ்டி ஆணையரகம் சார்பில் ஜிஎஸ்டி தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு மத்திய கலால், சுங்கம் மற்றும் சேவை வரி முதன்மை ஆணையர் எஸ். கண்ணன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக ராமன்மகசேசே விருது பெற்ற ஒருங்கிணைந்த கிராம மேம்பாட்டு திட்டம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனர் குழந்தை பிரான்சிஸ், கூடுதல் ஆணையர் ஏ.எஸ். மீனலோசனி, சேலம் கோட்ட மாநில வரி இணை ஆணையர் எஸ். சுபாஷ் சந்திரபோஸ், மாநில வரி இணை ஆணையர் (அமலாக்கம்) ஏ.சுவாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
விழாவில் மத்திய கலால், சுங்கம் மற்றும் சேவை வரி முதன்மை ஆணையர் எஸ். கண்ணன்
பேசியது:
ஜி.எஸ்.டி. இந்தியாவை ஒரு தேசம் ஒரு வரியாக மாற்றி நாட்டை பொருளாதார சங்கமமாகப் பிணைக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 500 சரக்குப் பொருள்களுக்கான வரி விகிதங்கள் குறைக்கப்பட்டு, ரிட்டர்ன் பைலிங் முறையை நெறிப்படுத்தியதன் மூலம் எளிமைபடுத்தப்பட்டுள்ளது. மின்வழி மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு ஒவ்வொரு மாதமும் சுமார் 5 கோடி மின்வழி மசோதா தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் பொருள்களின் இயக்கம் சீராக நடைபெற உதவுகிறது.
ஜிஎஸ்டி வருவாய் பிரதி மாதம் ரூ. 1 லட்சம் கோடியை எட்டியுள்ளது. நிகழாண்டு ஏப்ரல் மாதம் அதிகபட்சமாக ரூ. 1 லட்சத்து 13 ஆயிரத்து 865 கோடியை எட்டியுள்ளது. ஜிஎஸ்டி பொருளாதாரத்தில் ஊக்க விளைவை ஏற்படுத்தும்.
மேலும் ஏற்றுமதியாளர்கள், சிறு வணிகர்கள் மற்றும் தொழில் முனைவோர், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பொதுவான நுகர்வோர் போன்ற பல்வேறு துறைகளுக்கு பயன் கிடைக்கும்.
சேலம் ஆணையரகம் 2018-19 ஆம் ஆண்டில் ரூ.2 ஆயிரத்து 236 கோடி ஜிஎஸ்டி ரொக்க வருவாயாக ஈட்டியுள்ளது என்றார்.
விழாவில் ஜே.எஸ்.டபிள்யூ டிஜிஎம் ரமேஷ், ஒசூர் தொழிலதிபர் ராமைய்யா முனிராஜ், விஎஸ் எண்டர்பிரைசஸ் ராஜலிங்கம் சரவணன், கொங்குநாடு பொறியியல் கல்லூரி முதல்வர் பெரியசாமி, ஜேகேஎம் டிஜிஎம் அனந்த தீர்த்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.