ஆடி மாதத்தை வரவேற்கும் வகையில் தேங்காய் சுடும் விழா

ஆடி மாதத்தின் முதல் நாளையொட்டி, தேங்காய் சுடும் விழா புதன்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 


ஆடி மாதத்தின் முதல் நாளையொட்டி, தேங்காய் சுடும் விழா புதன்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 
ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் முதல் நாளில் தேங்காய் சுடும் விழா கொண்டாடப்படுவது வழக்கமாகும். அதன்படி, சேலத்தில் அரிசிபாளையம், கிச்சிபாளையம், கெங்கவள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேங்காய் சுடும் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
சேலத்தில் பால் மார்க்கெட், வ.உ.சி. காய்கறி சந்தை, ஆனந்தா காய்கறி சந்தை, அம்மாப்பேட்டை, குகை, அஸ்தம்பட்டி, அன்னதானப்பட்டி, தாதகாப்பட்டி சந்தை உள்பட மாவட்டத்தில் உள்ள 11 உழவர் சந்தைகளில் தேங்காய்கள் மற்றும் தேங்காய் சுடும் அழிஞ்சி மரக்குச்சிகள் சிறப்பாக விற்பனை செய்யப்பட்டன. ஒரு தேங்காய் ரூ.10 முதல் ரூ.25 வரையும், அழிஞ்சி மரக்குச்சி ரூ.15 முதல் ரூ.20 வரையும் விற்பனை செய்யப்பட்டது. 
புதிய தேங்காயை எடுத்து ஒரு கண்ணில் துளையிட்டு இளநீரை வெளியேற்றிவிடுவர். இதைத் தொடர்ந்து துளையிட்ட கண்ணின் வழியாக  பொட்டுக்கடலை, பச்சரிசி, பருப்பு, வெல்லம், அவல், எள், ஏலக்காய் ஆகியவை கலந்த கலவையை இட்டு, கூராக சீவப்பட்ட அழிஞ்சி மர குச்சியில் இந்த தேங்காயை சொருகி நெருப்பில் சுடுவர்.  
பின்னர் சுடப்பட்ட தேங்காயை அருகில் உள்ள பிள்ளையார் கோயிலுக்கு எடுத்து சென்று வழிபடுவதும், அதன் உள்ளே இருந்த கலவை உணவை உறவினர்களுக்கு கொடுத்து உண்டு மகிழ்வதும் வழக்கமாகும். 
இதேபோல் ஆடி மாதம் முதல் நாளையொட்டி, சேலம் கோட்டை மாரியம்மன், எல்லைப்பிடாரியம்மன், சித்தேஸ்வரா காளியம்மன், அம்மாப்பேட்டை செங்குந்தர் மாரியம்மன், குகை காளியம்மன், செவ்வாய்பேட்டை மாரியம்மன், தேர்வீதி ராஜகணபதி கோயில் உள்பட மாவட்டத்தில் உள்ள அம்மன், சிவன், விநாயகர், முருகன் கோயில்களில் சிறப்பு பூஜையும், அலங்கார ஆராதனையும் சிறப்பாக நடைபெற்றன.
சங்ககிரியில்...
சங்ககிரி நகர் பகுதியில் உள்ள குழந்தைகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்  தேங்காய்களை தீயில் சுட்டனர்.
பின்னர் அவற்றை தில்லை விநாயகர், ஓங்காளியம்மன் கோயில், ஸ்ரீ அல்லி குண்டம் மாரியம்மன் கோயில், சிவியார் மாரியம்மன், அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயில், அருள்மிகு செல்லியம்மன் கோயில்களில் உள்ள விநாயகர் சுவாமிக்கு குடும்பத்துடன் படைத்து வழிபட்டனர். புதுமணத் தம்பதிகள் புத்தாடை உடுத்தி பெற்றோருடன் சேர்ந்து தேங்காய்களை சுட்டு சுவாமிக்கு படைத்து வழிப்பட்டனர்.
ஓமலூரில்...
ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் மற்றும் கருப்பூர் ஆகிய வட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் ஆடிப் பண்டிகையை பொதுமக்கள் தேங்காய் சுட்டுக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதேபோல் ஓமலூர் வட்டாரத்தில் உள்ள ஆட்டுக்காரனூர், காமலாபுரம், தாராபுரம், கஞ்சநாயக்கன்ப்பட்டி, பூசாரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் குடும்பத்துடன் தேங்காய் சுட்டு மகிழ்ந்தனர். முனியப்பன், அய்யனாரப்பன் போன்ற காக்கும் கடவுள் கோயில்களிலும் ஆடிப் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆத்தூரில்...
ஆத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் அமமுக வழக்குரைஞர்கள் அணியின் மாவட்டச் செயலர் ஓ.எஸ்.சிவக்குமார் தலைமையில் தேங்காய் சுட்டு கொண்டாடினர். நிகழ்ச்சியில் சின்னசாமி, ராஜா, மருது, காமராஜ், பரமசிவம், கருணாமூர்த்தி, விநாயகமூர்த்தி, சங்கர் உள்ளிட்ட வழக்குரைஞர்கள் கலந்துகொண்டனர்.
வாழப்பாடியில்...
வாழப்பாடி பகுதியில் தேங்காயை தீயிலிட்டு சுட்டும், புதுமணத் தம்பதியருக்கு கிடா விருந்து வைத்தும் பாரம்பரிய முறைப்படி ஆடிப் பண்டிகையை கிராம மக்கள் கொண்டாடினர். வாழப்பாடியை அடுத்த பேளூரில் இயங்கும் உருது தொடக்கப் பள்ளியில் மாணவ-மாணவியர் ஆர்வத்தோடு, ஆசிரியர்கள் உதவியுடன் உரிய பாதுகாப்புடன் தேங்காய் சுட்டு பகிர்ந்துண்டு மகிழ்ந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com