தொழிலதிபரைக் கடத்திய வழக்கில் மேலும் ஒருவர் கைது
By DIN | Published On : 30th July 2019 09:46 AM | Last Updated : 30th July 2019 09:46 AM | அ+அ அ- |

தாண்டவராயபுரத்தைச் சேர்ந்த தொழிலதிபரைக் கடத்திய வழக்கில், மேலும் ஒருவரைத் தனிப்படை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆத்தூரை அடுத்துள்ள தாண்டவராயபுரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார் (44). இவர், பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். கர்நாடகத்தில் தனது தந்தையுடன் சேர்ந்து கிரானைட் கல்குவாரி நடத்தி வருகிறார். இவரைக் கடந்த மாதம் மர்ம கும்பல் காரில் கடத்திச் சென்றது. இதுபற்றி மல்லியகரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இச் சம்பவம் நடந்த மறுநாள் இரவு கடத்தப்பட்ட தொழில் அதிபரை சேலம் அருகே அல்லிக்குட்டையில் அந்தக் கும்பல் விடுவித்தது. அதன்பிறகு சுரேஷ்குமாரிடம் போலீஸார் விசாரித்தபோது கடத்தல்காரர்கள் தன்னிடம் இருந்த 5 பவுன் நகையைப் பறித்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்டியதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து ஆத்தூர் காவல்துணைக் கண்காணிப்பாளர் வி. ராஜூ தலைமையில் தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். கடத்தலில் ஈடுபட்டதாக சேலம் செவ்வாய்ப்பேட்டையைச் சேர்ந்த கும்பல் தலைவி ஜெயந்தி (37), அவரது அண்ணன் செந்தில் குமார் (39), அஸ்தம்பட்டியைச் சேர்ந்த தீபக்ராஜ் (34), அவரது உறவினர் ஹரி பிரசாத் (30) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் ஹரிபிரசாத் கொடுத்த தகவலின் பேரில் ஜெயந்தி தலைமையிலான கடத்தல் கும்பல் திட்டமிட்டு பணம் பறிப்பதற்காக தொழில் அதிபரைக் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இக் கடத்தலில் ஈரோடு, திருப்பூரைச் சேர்ந்த மேலும் 4 பேருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனால், தனிப்படை போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந் நிலையில் திருப்பூரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் வெங்கடேசன் (44) என்பவரைத் தனிப்படை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரையும் தேடி வருகின்றனர்.