அதிமுகவில் தொண்டர்கள்தான் தலைவர்கள்
By DIN | Published On : 09th June 2019 12:08 AM | Last Updated : 09th June 2019 12:08 AM | அ+அ அ- |

அதிமுகவில் தொண்டர்கள்தான் தலைவர்கள் என்று முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கூறினார்.எடப்பாடியில் சனிக்கிழமை நடந்த மேம்பாலத் திறப்பு நிகழ்ச்சியை அடுத்து பயணியர் மாளிகையில் நிருபர்களிடம் அவர் கூறியது:
உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்கத் தயாராக இருக்கிறோம். தேர்தல் எப்போது என்பதை தேர்தல் ஆணையம்தான் அறிவிக்கும். இந்த ஆட்சி 10 நாளில் கவிழும், ஒரு மாதத்தில் கவிழும் என்றெல்லாம் கூறி வந்தனர். இந்த அரசு இரண்டு ஆண்டுகள், 4 மாதங்களைக் கடந்துள்ளது. இந்த அரசு எஞ்சிய காலம் முழுவதும் நீடிக்கும். 2021-இல் அதிமுக வெற்றி பெற்று அரசை அமைக்கும்.
அதிமுகவில் கோஷ்டி பூசல் இல்லை. அதிமுக பலம் பொருந்திய கட்சியாக உள்ளது. அமமுக கட்சியில் இருந்து படிப்படியாக பலர் அதிமுகவுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். தொண்டர்கள் ஆளும் கட்சி அதிமுக. இங்கு தலைவர் என்ற சொல்லுக்கு இடமில்லை. தொண்டர்கள் எல்லோரும் தலைவர்கள்தான் என்றார் முதல்வர் பழனிசாமி.