எட்டுவழிச் சாலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு: விவசாயிகள் போராட்டம்
By DIN | Published On : 09th June 2019 04:31 AM | Last Updated : 09th June 2019 04:31 AM | அ+அ அ- |

எட்டுவழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலத்தில் ஐந்து சாலை சந்திப்பில் கட்டப்பட்டு வரும் ஈரடுக்கு மேம்பாலத்தின் ஒரு பகுதியான ஏவிஆர் ரவுண்டானா முதல் ராமகிருஷ்ணா சாலை வரையிலான புதிய மேம்பாலத்தை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். அப்போது முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது: இத் திட்டம் மத்திய அரசுடையதாகும். எனவே, விவசாயிகளை சமாதானப்படுத்தி திட்டம் அமைக்கப்படும். அதற்கான முயற்சியை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளும் என்று பேசினார்.
முதல்வரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலம் பூலாவரி பகுதியில் எட்டு வழி சாலைத் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் சனிக்கிழமை காலை தங்களது குடும்பத்தினருடன் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசைக் கண்டித்து கண்டன முழக்கம் எழுப்பப்பட்டது.
ஆச்சாங்குட்டப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 8 வழி சாலைத் திட்டத்தினால் பாதிக்கப்படும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். போராட்டம் குறித்து விவசாயிகள் கூறியது: எந்தவொரு காலகட்டத்திலும் எட்டு வழி சாலைக்கு நிலத்தை வழங்க மாட்டோம் என்றனர்.