ஓமலூர் வட்டாரத்தில் கிராம சேவை மையங்கள் பயன்பாட்டுக்கு வருமா?
By DIN | Published On : 09th June 2019 04:35 AM | Last Updated : 09th June 2019 04:35 AM | அ+அ அ- |

ஓமலூர் வட்டாரத்தில் பூட்டிக் கிடக்கும் கிராம மற்றும் வட்டார சேவை மையங்களைத் திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
ஓமலூர், காடையாம்பட்டி ஆகிய இரண்டு வட்டத்திலும் மூன்று ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இந்த ஒன்றியங்களில் மொத்தம் 67 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன.
தற்போது அரசின் சான்றிதழ்கள் பெறுதல், அரசு கட்டணம் கட்டுதல், மின்சார கட்டணம், தொலைபேசி கட்டணம் கட்டுதல் உள்பட பல்வேறு பணிகள் இணையதளத்தின் வாயிலாகவே நடைபெற்று வருகின்றன.
இப்பணிகள் அனைத்துக் கிராமங்களிலும் பொதுமக்களின் நன்மைக்காக சேவை மையங்கள் கட்டப்பட்டுள்ளன. ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய மூன்று ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள 67 கிராமங்களிலும் கிராம சேவை மையங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கட்டி முடிக்கப்பட்டது.
கிராம மக்கள் இணையதளம் மூலம் அரசு நலத்திட்ட உதவிகளுக்கு விண்ணப்பிக்கவும், சான்றிதழ்கள் பெறுவதற்கும் வசதியாக ஒவ்வொரு பஞ்சாயத்திலும், தலா ரூ. 15 லட்சம் மதிப்பில் ஒவ்வொரு கிராம சேவை மையம் கட்டப்பட்டுள்ளது. இது தவிர, ஒன்றிய அளவில் ஒவ்வொரு ஒன்றிய அலுவலக வளாகத்தில், ஒரு வட்டார சேவை மையம் கட்டடமும் கட்டப்பட்டுள்ளது.மேலும், அந்த சேவை மையங்களுக்கு தேவையான கணினி, ஸ்கேனர், பிரின்டர் உள்ளிட்டவைகளும் வழங்கப்பட்டுள்ளன.
ஆனால்,அனைத்து சேவை வசதிகள் இருந்தும் சேவை மையம் கட்டிடங்கள்திறக்கபடாமலும், செயல்பாட்டிற்கு கொண்டு வராமலும் பூட்டியே உள்ளன. இதனால், கிராம மக்கள்அரசு சான்றிதழ்களை பெறமுடியாமலும் தவிக்கின்றனர்.தனியார் கணினி மையங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மக்களின் நலன்கருதி உடனடியாக கிராம சேவை மையங்களைத் திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது குறித்துஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது: ஒவ்வொரு பஞ்சாயத்திலும் உள்ள கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திடம் சேவை மையங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும், கணினிப் பயிற்சி மகளிருக்கு அளிக்கப்படவில்லை. அதனால், சேவை மையம் செயல்பட, தாமதம் ஏற்பட்டுள்ளது என்றனர்.