ஸ்ரீ சென்றாயப்பெருமாள் கோயில் தேரோட்டம்
By DIN | Published On : 09th June 2019 04:34 AM | Last Updated : 09th June 2019 04:34 AM | அ+அ அ- |

வாழப்பாடி அக்ரஹாரம் சென்றாயப் பெருமாள் கோயில் தேரோட்டம் சனிக்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில், சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
வாழப்பாடி பேரூராட்சி அக்ரஹாரத்தில் 201 ஆண்டுகள் பழமையான ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீசென்றாயப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. 40 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது ஆண்டாக இக் கோயில் தேர்த் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி வெள்ளிக்கிழமை கணபதி ஹோமம், கலசபூஜையும், சென்றாயப்பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி திருக்கல்யாண வைபவமும், முக்கிய வீதிகள் வழியாக மணக்கோல உற்சவ மூர்த்திகள் திருவீதி உலா உற்சவமும், வாழப்பாடி இலக்கியப்பேரவை சார்பில் இன்னிசை பட்டிமன்றம் ஆகியவை நடைபெற்றன.
சனிக்கிழமை காலை சுவாமி திருத்தேர் ரதமேறுதல் நிகழ்ச்சியும், தேர் வடம் பிடித்து நிலைபெயர்த்தலும், ஊரணி பொங்கல் வைத்தலும் நடைபெற்றன. மாலையில் தேரோடும் ராஜவீதிகளில் தேரோட்டம் நடைபெற்றது. விழாவில், வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேர்த் திருவிழா ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர்கள் செய்திருந்தனர்.