சுற்றுலாப் பேருந்து மோதியதில் நண்பர்கள் இருவர் பலி
By DIN | Published On : 14th June 2019 11:06 AM | Last Updated : 14th June 2019 11:06 AM | அ+அ அ- |

சங்ககிரி, ஜூன் 13: சங்ககிரி வட்டம், தேவூர் அருகே தனியார் சுற்றுலாப் பேருந்து மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற நண்பர்கள் இருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
தேவூரை அடுத்த அரசிராமணி அருகே உள்ள ஆரையான்காடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி மகன் மணி (29). இவருக்கு திருமணமாகி சித்ரா என்ற மனைவியும், 6 மாத பெண் குழந்தையும் உள்ளன.
இவரும், அதே பகுதியைச் சேர்ந்த முத்து மகன் கார்த்திக்கும் (30) நண்பர்கள் .இருவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். இந் நிலையில் வியாழக்கிழமை அப் பகுதியில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்குச் சென்று விட்டு இருவரும் இரு சக்கர வாகனத்தில் எடப்பாடி நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். சந்தைபேட்டையில் செல்லும்போது எதிரே எடப்பாடியிலிருந்து குமாரபாளையத்துக்கு ஆள்களை ஏற்றி வந்த தனியார் சுற்றுலாப் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. அதில் பலத்த காயமடைந்த மணி, கார்த்திக் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.இதுகுறித்து தேவூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.