தென்னிந்திய நடிகர் சங்கத்தில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது என்று நடிகர் ராதாரவி தெரிவித்தார்.
Updated on
1 min read

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது என்று நடிகர் ராதாரவி தெரிவித்தார்.
திமுகவில் இருந்து விலகிய நடிகர் ராதாரவி, முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
இதைத்தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கு பாக்யராஜ் தலைமையிலான அணிக்கு ஆதரவு தெரிவித்து சேலத்தில் உள்ள நடிகர் சங்க உறுப்பினர்களை வியாழக்கிழமை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
அதிமுக நான் பிறந்த வீடாகும். தாய் வீடு போன்றதாகும். என்னை தற்காலிகமாக நீக்கியதற்கு ஓர் அறிவிப்பு கொடுத்திருக்கலாம்.தேர்தலின் போது புதுக்கோட்டையில்  நடிகர் கருணாஸின் செயல்பாடு மோசமாக இருந்தது. 
மு.க. ஸ்டாலினை அவதூறாக பேசிய வைகோ திமுகவில் சேரவில்லையா? அதுபோலதான் அவர்களுடைய செயல்பாடு உள்ளது. அதிமுகவின் இரட்டை தலைமை குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.
திமுகவில் இருந்தபோது என்னை சுமை தூக்க மட்டுமே பயன்படுத்தினர். ஆனால் அதிமுகவில் என்னை அப்படி விடமாட்டார்கள். படையப்பா திரைப்படத்தில் ரஜினி ஒரு காட்சியில் பெண்ணை பற்றி பேசுவார். அப்படித்தான் நானும் மேடையில் பேசினேன்.
விஷால் அணியின் காலம் பொற்காலம் என சொல்வது பொய். பணம் வாங்கி ஓட்டுபோட வேண்டாம். மானத்தை  விற்க வேண்டாம். விஷால் அணியின் செயல்பாடு நன்றாக  நடந்தது என சொல்லும்போது எதற்காக எதிரணி தோன்றியது? எங்கோ தவறு நடந்துள்ளது என்பதையே இது காட்டுகிறது.
அரசியலில் பிரச்னை உள்ளது போலவே நடிகர் சங்கத்திலும் பிரச்னை உள்ளது. முன்பு விஜயகாந்த், சரத்குமார் எல்லோரும் ஒன்றாக ஒற்றுமையாக இருந்தோம். எந்த உறுப்பினரையும் நீக்கவில்லை. ஆனால், தற்போது 200-க்கும் மேற்பட்டோர் மன்னிப்பு கடிதம் வழங்கியும் நீக்கியவர்கள் சங்கத்தில் சேர்க்கப்படவில்லை என்பது வருத்தமாக உள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது என்பதே எனது விருப்பமாகும். தற்போது போட்டியிடும் பாக்யராஜ் தலைமையிலான அணி நிச்சயம் வெற்றிபெறும். நடிகர் சங்கக் கட்டடம் என்று கூறி விஷால் அணியினர் ஆதரவு கேட்டு வருவதாகவும், நடிகர் சங்கக் கட்டடம் கட்டுவதற்கு படம் நடித்து பணம் தருவதாகக் கூறி ஏமாற்றிவிட்டனர். மேலும் மூன்று ஆண்டுகளுக்கு பிறகே நடிகர் விஷால் அணியினர் நாடக, நடிகர்களை சந்திக்க வந்துள்ளனர் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com