500 வார்த்தைகள் தெரிந்தால் எந்த மொழியையும் கையாளலாம்: எழுத்தாளர் சா.கந்தசாமி
By DIN | Published On : 28th March 2019 09:16 AM | Last Updated : 28th March 2019 09:16 AM | அ+அ அ- |

500 முதல் 700 வார்த்தைகளைத் தெரிந்து கொண்டால், எந்த ஒரு மொழியையும் எளிதாகக் கையாளலாம் என எழுத்தாளர் சா.கந்தசாமி தெரிவித்தார்.
பெரியார் பல்கலைக்கழக தமிழ்த் துறையின் சார்பில், "பன்முக நோக்கில் இலக்கியங்கள்' எனும் தலைப்பிலான பயிலரங்கின் 2-ஆம் நாள் நிகழ்வுகள் புதன்கிழமை நடைபெற்றன.
முதல் அமர்வில் நாட்டுப்புறவியல் அறிஞரும், பேராசிரியருமான காவ்யா சு.சண்முகசுந்தரம், "திறனாய்வுக் கலை' எனும் தலைப்பில் பேசியது: கவிதைக்கு உண்மைதான் அழகு. படைப்புகள் கிராம மக்களின் வாழ்வியலை நேர்மையோடு பதிவு செய்திட வேண்டும். ஒரு படைப்பாளி என்பவன் தன்னை பகிர்ந்து கொள்பவனாக இருக்க வேண்டும். திறனாய்வு என்பதை அறிவியலாகப் பார்க்காமல், அதை ஒரு கலையாகப் பார்க்க வேண்டும்.
ஒரு படைப்பு தோன்றும் போதே விமர்சனமும் தோன்றுகிறது. ஒரு விமர்சனமே படைப்பைத் தோற்றுவிக்கிறது என்ற இரு நிலைகளிலான கருத்தியலும் அறிஞர்களுக்கிடையே காணப்படுகிறது. படைப்பும், விமர்சனமும் நாணயத்தின் இரு பக்கங்களாக அமைகின்றன என்றார். தமிழ் விமர்சன வரலாற்றில் சிறு பத்திரிகைகள் பெரும் பங்காற்றின. சங்க காலம் தொடங்கி வழங்கி வந்த தமிழ்த் திறனாய்வு அணுகுமுறைகளை எடுத்தியம்பியதோடு, பல்வேறு திறனாய்வு வகைகளையும், கோட்பாட்டு ரீதியிலான மேனாட்டு திறனாய்வு முறைகளையும் அவர் விளக்கிக் கூறினார்.
2-ஆவது அமர்வில் எழுத்தாளர் சா.கந்தசாமி, "புதிய நோக்கில் இக் காலப் புதினங்கள்' எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியது: இன்றைய நிலையில் உலகத்தில் ஏழாயிரம் மொழிகள் பேசப்படுகின்றன. அம் மொழிகளில் மூவாயிரமாண்டுகளாகப் பேசியும், எழுதியும் வரும் இரண்டு மொழிகள் தமிழும், சீனமும் ஆகும். அதற்கு காரணம் படைப்பும், படைப்பாளர்களும் தான்.
யாரும் யாருக்கும் எதையும் கற்றுக் கொடுக்க முடியாது. மனித அறிவுதான் மொழியைக் கண்டுபிடித்தது. மொழியென்பது வெறும் ஒலி. எழுத்தென்பது வெறும் கோடு. தமிழில் ஒரு லட்சம் வார்த்தைகள் உள்ளதாகக் கணக்கிட்டுள்ளார்கள். அதில் 500 வார்த்தைகளைக் கொண்டு நான் புத்தகம் எழுதினேன். 500 முதல் 700 வார்த்தைகள் வரை தெரிந்திருந்தால், எந்த மொழியையும் திறம்பட கையாளலாம்.
சுமேரியர்கள்தான் முதன்முதலில் எழுத்தைக் கண்டுபிடித்தவர்கள். சங்க இலக்கியங்கள் போன்று சொற்களை செறிவாகப் பயன்படுத்த வேண்டும். தமிழ் எழுத்தாளர்களில் ஜெயகாந்தன் நான்காம் வகுப்பும், விந்தன் மூன்றாம் வகுப்பும் பயின்றவர்கள். படிப்புக்கும், படைப்புக்கும் எந்தத் தொடர்புமில்லை. சொந்த மொழி இலக்கியங்களைப் படிப்பதற்கான அறிவும், அதன் கருத்தை வெளியில் சொல்வதற்கான மற்றொரு அறிவும் வேண்டும். நம்மை நாமே அறிந்து கொள்வதுதான் படிப்பும், படைப்பும். நம்மை நாமே மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
நிறைவு விழாவில், கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், பெரியார் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ) கே.தங்கவேல், தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் தி.பெரியசாமி, பேராசிரியர் ம.சுந்தரமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...