அதிமுக, திமுக வேட்பாளர்கள் பிரசாரம் தொடக்கம்

சேலம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணன், திமுக வேட்பாளர்
Updated on
1 min read

சேலம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணன், திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் ஆகியோர் புதன்கிழமை தங்களது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினர்.
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த கருமந்துறையில் உள்ள செல்வ விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்து, கள்ளக்குறிச்சி தொகுதி வேட்பாளர் தேமுதிக எல்.கே சுதீஷ் மற்றும் சேலம் தொகுதி வேட்பாளர் அதிமுக சரவணன் ஆகியோருக்கு ஆதரவு தெரிவித்து அண்மையில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சேலம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணன்,  கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள சீரடி சாய்பாபா ஆலயத்தில் சிறப்பு பூஜை செய்து புதன்கிழமை தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். சேலம் கோரிமேடு பகுதியில் வீதி வீதியாகச் சென்று பொதுமக்களின் காலில் விழுந்து வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணன் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து கோரிமேடு, கன்னங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் திறந்தவெளி வாகனம் மூலம்  பிரசாரம் மேற்கொண்டார்.
இதில், அதிமுக எம்.எல்.ஏ. ஜி.வெங்கடாஜலம், முன்னாள் எம்.எல்.ஏ. எம்.கே.செல்வராஜு, தேமுதிக  சேலம் மாநகர மாவட்டச் செயலர் ராதாகிருஷ்ணன், பாமக, பாஜக, தமாகா நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு: சேலம் சாரதா கல்லூரி சாலையில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சேலம் மக்களவைத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கந்தசாமி, எம்.எல்.ஏ. ஆர்.ராஜேந்திரன்,  திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன், கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் வீரபாண்டி ஆ.ராஜா, மேற்கு மாவட்டச் செயலர் எஸ்.ஆர்.சிவலிங்கம், காங்கிரஸ் மாநில செயல்தலைவர் ஆர்.மோகன் குமாரமங்கலம், மாநகர மாவட்டத் தலைவர் ஜெயப்பிரகாஷ், மதிமுக நிர்வாகி ஆனந்தராஜ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதைத் தொடர்ந்து, கன்னங்குறிச்சி, அஸ்தம்பட்டி பகுதிகளில் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com