குழந்தைகள் விற்பனை வழக்குநாமக்கல் சுகாதாரத் துறை துணை இயக்குநரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை
By DIN | Published On : 05th May 2019 05:23 AM | Last Updated : 05th May 2019 05:23 AM | அ+அ அ- |

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கு தொடர்பாக நாமக்கல் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் மருத்துவர் ரமேஷிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியில் விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் பச்சிளம் குழந்தைகளை பெற்றோரிடமிருந்து முறைகேடாகப் பெற்று போலி பிறப்பு சான்றிதழ் தயாரித்து, குழந்தைகளை விற்பனை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து, சம்பவத்தில் ஈடுபட்டதாக செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி உள்ளிட்ட 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதனிடையே, இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது. சேலம் சிபிசிஐடி டி.எஸ்.பி. கிருஷ்ணன் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசைச் சந்தித்து வழக்கு தொடர்பான ஆவணங்களை டி.எஸ்.பி. கிருஷ்ணன் வெள்ளிக்கிழமை பெற்றுக் கொண்டார்.
மேலும், வழக்கில் கைதானவர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும் சிபிசிஐடி போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், நாமக்கல் மாவட்ட சுகாதார துறை துணை இயக்குநர் மருத்துவர் ரமேஷ் நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது.
அதன்பேரில், நாமக்கல் மாவட்ட சுகாதார துறை துணை இயக்குநர் மருத்துவர் ரமேஷ், சேலத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் சனிக்கிழமை காலை 11 மணிக்கு நேரில் ஆஜரானார்.
அப்போது டிஎஸ்பி கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் பிருந்தா, சாரதா ஆகியோர் அடங்கிய குழுவினர் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை மேற்கொண்டனர்.
இதுதொடர்பாக துணை இயக்குநர் ரமேஷ் கூறுகையில், குழந்தை விற்பனை தொடர்பாக கொடுத்த புகார் குறித்து காவல்துறையினர் விளக்கம் கேட்டனர். இதுதொடர்பாக விரிவாக போலீஸாரிடம் தெரிவித்துள்ளேன். போலிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது குறித்தும், அதற்கான விவரங்களையும் சிபிசிஐடி காவல்துறையினர் கேட்டுள்ளனர். ஏற்கெனவே இதுகுறித்து துறை ரீதியாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.