நீட் தேர்வு: சேலத்தில் 18 மையங்களில் 16,699 மாணவர்கள் எழுதுகின்றனர்
By DIN | Published On : 05th May 2019 05:26 AM | Last Updated : 05th May 2019 05:26 AM | அ+அ அ- |

சேலம் மாவட்டத்தில் 18 மையங்களில் 16,699 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வை (நீட்) ஞாயிற்றுக்கிழமை எழுதவுள்ளனர்.
எம்.பி.பி.எஸ். கல்வியில் சேருவதற்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (மே 5) நடைபெறுகிறது.
இத் தேர்வை நாடு முழுவதும் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர்.
தமிழகத்தில் மட்டும் சுமார் 1.5 லட்சம் பேர் எழுதுகின்றனர். மாநிலம் முழுவதும் சென்னை, கோவை, மதுரை, சேலம், நாமக்கல் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் உள்ள 520 மையங்களில் இத்தேர்வை மாணவர்கள் எழுதுகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் சுமார் 18 மையங்களில் 16,699 மாணவர்கள் நீட் தேர்வை எழுதுகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள செந்தில் பப்ளிக் பள்ளி, தேர்வு நடத்தும் மையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட அண்டை மாவட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுத சேலம் மையங்களுக்கு வருகின்றனர்.
நீட் தேர்வு பகல் 2 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். தேர்வு முடிவுகள் ஜூன் 5-ஆம் தேதி வெளியாகும் என தேசிய தேர்வுகள் முகமைத் தெரிவித்துள்ளது.
இதனிடையே தேர்வு மையங்களுக்கு மாணவர்களை முன்கூட்டியே அனுமதிக்க வேண்டும் என்றும், தேர்வு நேரமான 3 மணி நேரத்துக்கு முன்பாக ஓ.எம்.ஆர். தாளில் உள்ள தகவல்களை நிரப்பக் கூடுதலாக 15 நிமிடம் அனுமதி தர வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.