வாழப்பாடி பகுதி பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடையின்றி பயணிகள் அவதி
By DIN | Published On : 05th May 2019 05:24 AM | Last Updated : 05th May 2019 05:24 AM | அ+அ அ- |

வாழப்பாடி பகுதியில், சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையோரக் கிராமங்களில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடை அமைக்கப்படாததால், பேருந்துக்கு காத்திருக்கும் பயணிகள், மழை, சுட்டெரிக்கும் வெயிலில் அவதிபடும் நிலை ஏற்பட்டுள்ளது.
வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டி ஊராட்சி மைதேரா ஸ்டேஷன், காட்டுவேப்பிலைப் பட்டி ஊராட்சி சேசன்சாவடி, வெள்ளாளகுண்டம் பிரிவு சாலை, கருமாபுரம், காரிப்பட்டி ஆகிய பேருந்து நிறுத்தங்களில் இதுவரை பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை.
இதனால், பேருந்துக்கு காத்திருக்கும் பள்ளி மாணவ-மாணவியர் உள்ளிட்ட பயணிகள், மழை, சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கி அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, வாழப்பாடி பகுதி கிராமங்களில் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் பேருந்து நிறுத்தங்களில் பயணிகள் நிழற்குடை அமைத்திட சேலம் மண்டல தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து காட்டுவேப்பிலைப்பட்டி ஊராட்சி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது: சேசன்சாவடி பேருந்து நிறுத்தத்தில் இதுவரை பயணிகள் நிழற்குடை அமைத்துக் கொடுக்கவில்லை. இதனால் கிராம மக்களே ஒன்றிணைந்து தென்னங்கீற்று கொட்டை போட்டு தற்காலிக நிழற்குடை அமைத்துள்ளோம். இந்த நிழற்குடை காற்று, மழையில் அடிக்கடி சேதம் அடைந்து விடுகிறது. எனவே, பேருந்து நிறுத்தத்தின் இருபுறமும் பயணிகள் நிழற்குடை அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.