காமலாபுரம் மாரியம்மன் கோயில் திருவிழா
By DIN | Published On : 05th May 2019 05:27 AM | Last Updated : 05th May 2019 05:27 AM | அ+அ அ- |

ஓமலூர் அருகே காமலாபுரம் சக்தி மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி சனிக்கிழமை ஏராளமான பக்தர்கள் விமான அலகு, கார் அலகு உள்ளிட்ட பல்வேறு அலகுகள் குத்தியும், பொங்கல் வைத்தும் அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஓமலூர் அருகே காமலாபுரம் கிராமத்தில் பழமை வாய்ந்த சக்தி மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் நிகழாண்டு சித்திரை மாதத் திருவிழா கடந்த 15 நாள்களுக்கு முன்பு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டன.
பக்தர்கள் பொங்கல் வைத்தும் ஆடு, கோழிகள் பலியிட்டும் தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்தினர். இதைத்தொடர்ந்து அலகு குத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அதிகமான பக்தர்கள் விமான அலகு குத்தி அந்தரத்தில் தொங்கி வந்தனர். தொடர்ந்து பெண்கள் கடவாய் அலகு, நாக்கில் அலகு, கார் அலகு குத்தியும் வந்தனர். விழாவில் ஒருவர் அம்மன் வேடமிட்டு விமான அலகு குத்தி அந்தரத்தில் தொங்கியவாறு வந்தார். பல்வேறு அலகுகளை ஏராளமான பக்தர்கள் குத்தி வந்து நேர்த்திக் கடனைச் செலுத்தினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...