சங்ககிரி அருகே அடுத்தடுத்த 6 ரயில்களில் பெண்களிடம் 24 பவுன் நகைகள் பறிப்பு
By DIN | Published On : 05th May 2019 05:23 AM | Last Updated : 05th May 2019 05:23 AM | அ+அ அ- |

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே அடுத்தடுத்து 6 ரயில்களில் பயணிகளிடம் 24 பவுன் நகைகளை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்திலிருந்து ஈரோடு, கோவை வழியாக கேரளம் செல்லும் ரயில் பாதையில் சங்ககிரி அருகே மாவெலிபாளையம் எல்.ஜி. கேட் மற்றும் வைகுந்தம் மேட்டுக்காடு ஆகிய பகுதிகளில் ரயில்வே பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
எனவே, இந்த வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களும் பாலம் அமைக்கும் பணி நடைபெறும் இடத்தில் மட்டும் 20 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்தச் சூழலைப் பயன்படுத்தி மர்ம கும்பல் வெள்ளிக்கிழமை இரவு ஓடும் ரயிலில் ஏறி பயணிகளிடம் கத்திமுனையில் நகை மற்றும் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு இறங்கி தப்பி ஓடியது தெரியவந்தது.
முதலில் ஆலப்புழா விரைவு ரயில், சேரன் விரைவு ரயில், பின்னர் அடுத்தடுத்து வந்த மயிலாடுதுறை விரைவு ரயில், மங்களூரு விரைவு ரயில், திருவனந்தபுரம் விரைவு ரயில் மற்றும் கொச்சி விரைவு ரயில் என 6 ரயில்களில் நகைப் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்த 6 ரயில்களிலும் நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 4 மணி வரையிலான இடைபட்ட நேரத்தில் கொள்ளைகள் நடைபெற்றுள்ளன.
இதுதொடர்பாக கோவையைச் சேர்ந்த விமலா, திருவாரூரை சேர்ந்த வினோதினி, பெங்களூரைச் சேர்ந்த அம்பிகா, சென்னையைச் சேர்ந்த அருண்கிருஷ்ணன், கேரளத்தைச் சேர்ந்த சாய்ஜி ஆகியோர் சேலம் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இச் சம்பவம் நிகழ்ந்த இடம் சங்ககிரி மாவெலிபாளையம் எல்லை, ஈரோடு மாவட்ட ரயில்வே போலீஸாரின் கட்டுப்பாட்டில் வருவதால், புகார்கள் அனைத்தும் ஈரோடு ரயில்வே போலீஸாருக்கு மாற்றப்பட்டுள்ளன.
அதைத்தொடர்ந்து, ஈரோடு ரயில்வே போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று நேரில் ஆய்வு நடத்தினர்.
மேலும், கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்தடுத்து 6 ரயில்களில் பெண்களிடம் சுமார் 24 பவுன் நகைகள் பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...