தம்மம்பட்டியில் அடிக்கடி நடைபெறும் பேருந்து நேரப் பிரச்னை
By DIN | Published On : 05th May 2019 05:25 AM | Last Updated : 05th May 2019 05:25 AM | அ+அ அ- |

தம்மம்பட்டியில் அடிக்கடி நிகழும் பேருந்து நேர பிரச்னையால் குறைந்தது 15 நிமிடங்களுக்கு மேல் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர்.
தம்மம்பட்டி பேருந்து நிலையம் சேலம் - திருச்சி மார்க்கத்தில் உள்ளது. இந்த மார்க்கத்தில் பேருந்துகள் நின்று குறித்த நேரங்களில் புறப்படக்கூடிய வசதிகளுடைய பேருந்து நிலையங்கள் இரண்டுமட்டும் தான்.
ஒன்று தம்மம்பட்டி மற்றொன்று துறையூர். இதில் தம்மம்பட்டி பேருந்து நிலையத்துக்கு தினமும் 110 பேருந்துகள் வந்து செல்கின்றன.
காலை 6 மணி முதலே , ஒரே மார்க்கத்தில் செல்லும் அடுத்தடுத்த பேருந்துகள், நிமிடக்கணக்கில் தாமதமாகப் பேருந்து நிலையத்திற்கு வந்தாலோ, தாமதமாக அதாவது ,பின்னாடி வரும் பேருந்தின் நேரத்தில் ,புறப்பட்டாலோ இரு பேருந்துகளின் ஓட்டுநர்களுக்கும், நடத்துநர்களுக்கும் வாய்த் தகராறு, கைகலப்பு வரை சென்றுவிடுகிறது.
பெரும்பாலும் வாய்த் தகராறு தொடர்ந்து நீடிக்கும் ,பேருந்துகளில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும் நேரத்திலும்கூட இரு பேருந்து ஊழியர்களும் அவர்களைக் கண்டு கொள்வதில்லை.
இந்த 5 நிமிட டைமிங் பிரச்னை சில நேரங்களில் அரைமணி நேரத்தைத் தொட்டு விடும். இந்த நிலையில் துறையூரிலிருந்து அடுத்தடுத்து தம்மம்பட்டிக்கு புறப்பட்டு வரவேண்டிய ஒரு அரசுப் பேருந்தும், தனியார் பேருந்தும் மே 2 ஆம் தேதி காலை 7.20 துறையூரிலே 5 நிமிட நேர வித்தியாசத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. போட்டி போட்டுக் கொண்டு இரு பேருந்துகளும் தம்மம்பட்டிக்கு வியாழக்கிழமை காலை 8.15 மணிக்கு தம்மம்பட்டி எட்டடியான் கோயிலைத் தாண்டி பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது, இரு பேருந்துகளும் சாலையிலேயே நிறுத்திக் கொண்டு, அதன் ஊழியர்கள் தகராறு செய்யத் தொடங்கினர்.
தகராறு நடந்துகொண்டிருந்தபோது இருபேருந்துகளுக்கும் அடுத்து துறையூரிலிருந்து புறப்பட்ட பேருந்தும் வந்துவிட, மூன்று பேருந்துகளும் ஒரே நேரத்தில் சாலையை ஆக்கிரமித்து நின்றுகொண்டிருந்தன.
கால் மணிநேரத்திற்கும் மேலாகவே பேருந்து நேர பிரச்னை தொடர்ந்தது.
இதனால் மூன்று பேருந்துகளின் பயணிகளும் பாதிக்கப்பட்டனர்.
இதுபோன்ற டைமிங் பிரச்னையை பயணிகள் நலனை கருத்தில் கொண்டு தவிர்க்கப்படவேண்டும் என்பது சமூக நல ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...