தம்மம்பட்டியில் தண்ணீரின்றி காயும் வாழைகள்
By DIN | Published On : 05th May 2019 05:24 AM | Last Updated : 05th May 2019 05:24 AM | அ+அ அ- |

தம்மம்பட்டி, கெங்கவல்லி சுற்றுவட்டாரப் பகுதியில் வாழை விவசாயம் தொடர்ந்து அழிந்து வருகிறது .
கெங்கவல்லி வட்டாரத்தில் தம்மம்பட்டி, வீரகனூர், பச்சமலை, தெடாவூர், செந்தாரப்பட்டி, கெங்கவல்லி சுற்றுவட்டாரத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட ஊர்களில் கடந்த ஐந்து வருடம் முன்னர் வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர்களில் செவ்வாழை, தேன்வாழை, பூவன் வாழை, ரோபேஸ்டா உள்ளிட்ட வாழைகள் அதிகளவில் பயிரிடப்பட்டு, வாழைத்தோப்புகள் பார்க்கும் இடமெங்கும் காட்சியளித்தன.
அதன்பிறகு வறட்சி தலைதூக்கத் தொடங்கி ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒன்றரை வருடம் வரை வறட்சி தொடர்ந்தது. வாழை பயிரிட்டவர்கள், தண்ணீர் இன்றி வாழை மரங்கள் காய்வதைக் கண்டு கவலை அடைந்தனர்.
வாழை விவசாயிகள் பெரும்பாலானோர் அப்போதிருந்தே வாழை பயிரிடும் பரப்பைக் குறைக்கத் தொடங்கினர். செவ்வாய்க்கிழமைதோறும் வாரச்சந்தை கூடுமிடத்தில் நடந்துவந்த வாழைச் சந்தை, தற்போது அடியோடு நின்றுவிட்டது.
இதனால் இப் பகுதியில் வாழைத்தோப்புகளில் கிடைக்கும் வாழைத்தார்களை,விவசாயிகள் 9 கி.மீ. தொலைவில் உள்ள நாமக்கல் மாவட்டம், முள்ளுக்குறிச்சியில் கூடும் வாழைச் சந்தைக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால் விற்பனைச் சந்தையில் வாழைப் பழங்களின் விலை ரூ. 3 முதல் ரூ. 15 வரை விற்பனையாகிறது. வாழை இலைகளின் விலை குறைந்தது ரூ. 5-க்கு விற்பனையாகிறது.