தீர்த்தக் குடம் எடுக்கச் சென்றவர்கள் தேனீக்கள் கொட்டியதில் காயம்
By DIN | Published On : 05th May 2019 05:24 AM | Last Updated : 05th May 2019 05:24 AM | அ+அ அ- |

மேட்டூர் காவிரியில் மாரியம்மன் கோயில் திருவிழாவுக்குத் தீர்த்தகுடம் எடுக்கச் சென்ற பக்தர்களை தேனீக்கள் கொட்டியதில் 31 பேர் காயமடைந்தனர்.
மேட்டூர் அருகே தேசாய்நகரில் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இத் திருவிழாவின் ஒரு பகுதியாக தீர்த்தகுடம் ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற இருந்தது. இதற்காக சனிக்கிழமை காலை பக்தர்கள் நுற்றுக்கணக்கானோர் மேட்டூர் காவிரிக்கு வந்தனர்.
அங்கு நீரேற்று நிலையம் அருகில் குடங்களில் தண்ணீர் நிரப்பி வைத்துவிட்டு ஊதுபத்தி, கற்பூரம், சாம்பிராணி ஏற்றி தீபாராதனை காட்டினர். ஊதுபத்தியின் வாசனைக்கு அருகில் இருந்த ராட்சத தேன்கூட்டிலிருந்து ராட்சத தேனீக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பக்தர்களை விரட்டி விரட்டி கடித்தன.
இச் சம்பவத்தில் 15 ஆண்களும், 16 பெண்களும் காயமடைந்தனர். அனைவரும் மேட்டூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தேசாய் நகரைச் சேர்ந்த சரவணன் மனைவி சரஸ்வதி (35) அவரது மகள் வைசாலி மற்றும் சில் உள் நோயாளிகளாக சேர்க்கப்பட்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...