கடத்தப்பட்ட திமுக பிரமுகர் வீடு திரும்பினார்
By DIN | Published On : 15th May 2019 08:53 AM | Last Updated : 15th May 2019 08:53 AM | அ+அ அ- |

சேலத்தில் கடத்திச் செல்லப்பட்ட திமுக கிளைச் செயலர் செவ்வாய்க்கிழமை அதிகாலை வீடு திரும்பினார்.
சேலம் சிவதாபுரம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (45), பனங்காடு திமுக கிளை செயலாளராக இருந்து வருகிறார். வெள்ளிப்பட்டறை நடத்திவருவோருக்கு கடன் அளித்தல், ஏலச்சீட்டும் நடத்துதல் போன்ற தொழில்களை செய்து வருகிறார். இந்த நிலையில், நாகராஜ் ஞாயிற்றுக்கிழமை இரவில் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது 5 பேர் கொண்ட கும்பலால் கடத்தி செல்லப்பட்டார்.
இதுதொடர்பாக நாகராஜின் நண்பர் நேரு சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து சேலம் மாநகர காவல் துணை ஆணையர் பி.தங்கதுரை, ஆய்வாளர் செந்தில் உள்ளிட்டோர் விசாரணை செய்து வந்தனர்.
இந்தநிலையில் நாகராஜ் செவ்வாய்க்கிழமை அதிகாலை வீடு திரும்பி வந்தார். இதையறிந்த போலீஸார் விசாரணைக்காக சூரரமங்கலம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தார். அப்போது நாகராஜ் தன்னை 5 பேர் கொண்ட கும்பல் காரில் சித்தூருக்கு கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டியதாகவும், தற்போது பணம் ஏதும் இல்லை என கூறியதால் போலீஸில் எதுவும் தெரிவிக்க கூடாது என கூறி சித்தூரில் இறக்கி விட்டு சென்றதாகவும், அங்கிருந்து பேருந்து பிடித்து சேலம் வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஏலச்சீட்டு நடத்தியதில் பகை ஏற்பட்டு நாகராஜ் கடத்தப்பட்டாரா அல்லது பணத் தகராறில் நாகராஜ் கடத்தல் நாடகம் ஆடுகிறாரா என பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், ஏலச்சீட்டு நடத்தி நாகராஜ் மோசடி செய்ததாக சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் உள்ளது குறிப்பிடத்தக்கது.