குடிநீர் கேட்டு மறியல்
By DIN | Published On : 15th May 2019 08:53 AM | Last Updated : 15th May 2019 08:53 AM | அ+அ அ- |

குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நல்லாகவுண்டம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட புது நல்லாகவுண்டம்பட்டி, பழைய நல்லாகவுண்டம்பட்டி,செட்டியார்கடை, பச்சாயிகோவில், தட்டாங்காடு உள்ளிட்ட கிராமங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
தற்போது வறட்சி நிலவி வருவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, பெரும்பாலான ஆழ்துளை கிணறுகள் வற்றியது. இதைத் தொடர்ந்து, கடந்த ஒரு மாதகாலமாக குடிநீர் விநியோகம் சரிவர வழங்கப்படவில்லைஎன்று கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், ஆனைகவுண்டம்பட்டியில் இருந்து பழையூர் செல்லும் சாலையில் கிராம மக்கள் முள்களை வெட்டி போட்டு காலிக் குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலின்பேரில் ஓமலூர் போலீஸார் விரைந்துவந்து சமரசம் பேசினர். அப்போது, கோடைக்காலம் முடியும் வரை மாற்று ஏற்பாடு செய்து குடிநீர் வழங்கப்படும் என்ற வாக்குறுதியைத் தொடர்ந்து, கிராம மக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
ஆட்டையாம்பட்டியில்...
குடிநீர் கேட்டு, இடங்கணசாலை பேரூராட்சி அலுவலகத்தை செவ்வாய்க்கிழமையும் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
ஆட்டையாம்பட்டி அருகேயுள்ள இடங்கணசாலை பேரூராட்சிக்குள்பட்ட கே. கே. நகர், தூதனூர் மாட்டையாம்பட்டி, காந்தி நகர், இ.மேட்டுக்காடு, காடையாம்பட்டி உள்ளிட்ட பகுதியை சேர்ந்தோர் கடந்த ஒரு மாத காலமாக சரியான குடிநீர் வரவில்லை என்று கூறி, போராட்டங்களை நடத்திவருகின்றனர்.
இந்த நிலையில், 10-க்கும் மேற்பட்ட வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்றுகூடி செவ்வாய்க்கிழமை காலை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இவர்களிடம் பேரூராட்சிகள் இணை இயக்குநர் முருகன், செயல் அலுவலர் தாமோதரன் உள்ளிட்டோர் சமரசம் பேசினர்.
அப்போது, குடிநீர் பிரச்னையை உடனடியாகத் தீர்க்க டிராக்டர், லாரிகளில் வார்டுகள் வாரியாக குடிநீர் விநியோகம் செய்யப்படும் என உறுதியளித்தனர். இதனால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.!