வெயில் அதிகரிப்பால் கொத்தமல்லி விளைச்சல் பாதிப்பு
By DIN | Published On : 19th May 2019 07:41 AM | Last Updated : 19th May 2019 07:41 AM | அ+அ அ- |

ஓமலூர், காடையாம்பட்டி வட்டாரத்தில் கத்திரி வெயில் அதிகரித்துள்ளதால் கொத்தமல்லிக்கு நல்ல விலை இருந்தும் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஓமலூர், காடையாம்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, பூசாரிப்பட்டி, டேனிஷ்பேட்டை, தீவட்டிப்பட்டிஆகிய பகுதிகளில் கிணற்றுநீர்ப் பாசன விவசாயிகள் கொத்தமல்லி சாகுபடி செய்துள்ளனர். கொத்தமல்லி நடவு செய்த 50 நாள்களில் விளைச்சலுக்கு வந்துவிடும். மழை அதிகமானால் அழுகலால் பாதிக்கும். வெயில் அதிகரித்தால் வளர்ச்சிக் குன்றி கருகிவிடும். தற்போது ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், கொத்தமல்லி வளர்ச்சி இன்றி குன்றியுள்ளது. பல இடங்களில் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த மாதம் கிலோ ஒன்று ரூ.10 முதல் ரூ.15 ஆக இருந்த கொத்தமல்லி தற்போது விளைச்சல் இல்லாத நிலையில் கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விலை போகிறது.
இதுகுறித்து கொத்தமல்லி விவசாயிகள் கூறும் போது, கடந்தாண்டு கொத்தமல்லி நல்ல விளைச்சல் இருந்தும், பலத்த மழையால் அழுகல் ஏற்பட்டு அறுவடை செய்ய முடியவில்லை. இந்த ஆண்டு வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால் வளர்ச்சி அடையாமல் கருகியதோடு, விளைச்சல் குறைந்துள்ளன. தற்போது கிலோ ரூ.30 முதல் ரூ.40 ரூபாய் வரை உள்ளது. மேலும் விலை உயர வாய்ப்புள்ளது. விளைச்சல் இல்லாததால் அறுவடை செய்யும் தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுத்து கட்டுப்படியாகவில்லை என்றனர்.
காய்கறி மற்றும் கீரை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு தண்ணீரின் இருப்பை பொருத்து தெளிப்பு நீர் பாசனக் கருவிகளை மானியத்தில் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.