ஓமலூரில் புத்தகப்பை தயாரிப்புப் பணிகள் தீவிரம்
By DIN | Published On : 26th May 2019 05:02 AM | Last Updated : 26th May 2019 05:02 AM | அ+அ அ- |

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் விரைவில் திறக்க உள்ள நிலையில் ஓமலூரில் புத்தக பைகள் தயாரிப்பு பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றன.
கடந்த ஆண்டை விட நிகழாண்டில் விலை 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் ஜூன் 3-ஆம் தேதி திறக்கப்பட உள்ளன. தமிழக அரசின் சார்பில், அரசு பள்ளிகளுக்கு 1.52 கோடி புத்தக பைகள் வழங்கப்படுகின்றன.
தனியார் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் பயன்படுத்துவதற்கான புத்தக பைகள் தயாரிப்பு பணிகள் ஓமலூர் வட்டாரத்தில் உள்ள பல்வேறு இடங்களில் தயாரிக்கபட்டு வருகின்றன.
புத்தக பைகள் வெளி மார்க்கெட்டில் தற்போது விற்பனையும், தயாரிப்பும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில், மூன்றாம் வகுப்பு, அதற்கு குறைவான வகுப்பு மாணவ, மாணவியருக்கு வண்ணமயமான, பல்வேறு டிசைன்களுடன் பைகள் தயாரிக்கப்படுகின்றன. மூன்று முதல் ஐந்து வகுப்பு, ஆறு முதல், எட்டு வரை, ஒன்பது முதல், பிளஸ் 2 வரையிலும், கல்லூரி மாணவர்களுக்கு என ஐந்து விதமான பைகள் தயாரிக்கப்படுகின்றன.
இவை குறைந்த பட்சம் 180 ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து ஓமலூர் புத்தக பை தயாரிப்பாளர்கள் கூறியது:
ரெக்சின், மேட்டி, கோட் டர்பி, கேன்வாஸ், ஜீன்ஸ் என பல்வேறு பொருள்களைக் கொண்டு புத்தகப் பைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதில், ரெக்சின், ஜீன்ஸ் பைகளுக்கு மாணவ, மாணவியர் மத்தியில் கூடுதல் வரவேற்பு உள்ளது.
தமிழகத்துக்கு கடந்த ஆண்டு வரை,பெங்களூரில் இருந்தே அதிக அளவில், பள்ளி புத்தக பைகள் விற்பனைக்கு வந்தன. ஆனால், அவற்றின் தரம் எதிர்பார்த்த அளவு இல்லாததால், தற்போது உள்ளூர் தயாரிப்புக்கு பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவியர் முக்கியத்துவம் அளித்துள்ளனர்.
உற்பத்தியாளர்கள் கூறியது:
குறைந்த நாட்களே உள்ள நிலையில், 80 சதவீத பைகள் தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்து, பைகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், நிகழாண்டில், புத்தக பைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் வரி விதித்துள்ளதால் 20 சதவீதம் வரை விலை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தனர்.