தினமணி செய்திஎதிரொலி: தம்மம்பட்டி பேருந்து நிலைய மேற்கூரை விரைவில் சீரமைப்பு
By DIN | Published On : 26th May 2019 05:01 AM | Last Updated : 26th May 2019 05:01 AM | அ+அ அ- |

தம்மம்பட்டி பேருந்து நிலைய மேற் கூரை சீரமைக்கப்படாமல் இருப்பது குறித்து தினமணியில் செய்தி வெளியானதின் எதிரொலியாக மேற்கூரை சீரமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது.
தம்மம்பட்டி பேருந்து நிலைய மேற்கூரை கடந்த 6 மாதங்களாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து தினமணியில் படத்துடன் செய்தி சனிக்கிழமை வெளியானது.
அதன் எதிரொலியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து உயர் அதிகாரிகள், தம்மம்பட்டி பேருந்து நிலைய மேற் கூரை சீரமைக்கப்படாமல் காலதாமதம் செய்யப்பட்டது குறித்தும், அதற்கான பணிகள் எந்த நிலையில் உள்ளது குறித்தும் தம்மம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அதையடுத்து தம்மம்பட்டி பேருந்து நிலைய மேற்கூரை தளம் 1 முதல் 5 வரை தற்காலிகமாக சீரமைப்பதற்கு வேண்டிய திட்ட வரைவுகளை பேரூராட்சி நிர்வாகத்தார் சனிக்கிழமை துரித கதியில் தயார் செய்தனர். பின்னர் முழுமையான கருத்துருகள் அடங்கிய கோப்பு, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. மாவட்ட பொறியாளர் உதவியுடன், இதற்கான நிதி வரைவு தயாரிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
பேருந்து நிலைய மேற்கூரையை சீரமைக்க தேவையான நிதி ரூ. 10 லட்சத்துக்குள் இருந்தால், பேரூராட்சிகளுக்கான மண்டல உதவி இயக்குநரும், ரூ. 10 லட்சத்துக்கு மேல் இருந்தால் மாவட்ட ஆட்சியரும் அதற்கான அனுமதியை வழங்குவர். 27ஆம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், அதற்குப் பின், மேற்கூரை செப்பனிடும் பணிகள் துவங்கும் எனத் தெரிகிறது.