பொறியியல் சீர்திருத்தக் குழு அமைக்க வேண்டும்: அரசுக்கு பொறியாளர்கள் வலியுறுத்தல்
By DIN | Published On : 26th May 2019 04:58 AM | Last Updated : 26th May 2019 04:58 AM | அ+அ அ- |

பொதுப்பணித் துறையையும், பொறியாளர்களின் பணி நலன்களை மேம்படுத்த பொறியியல் சீர்திருத்தக் குழு அமைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பொதுப்பணித் துறை, பொறியாளர் சங்கம் மற்றும் உதவிப் பொறியாளர் சங்கத்தின் ஒருங்கிணைந்த மாநில மையச் செயற்குழுக் கூட்டம் சேலத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு பொறியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி. கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். உதவிப் பொறியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எம். தனசேகரன் வரவேற்றார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம்: அரசாணை எண் 328-ஐ ரத்து செய்து ஏழாவது ஊதியக் குழுவின் பலன்களை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி வழங்க வேண்டும்.
பொறியாளர் ஆட்குறைப்பு போன்ற நடவடிக்கைகளை அரசு எடுக்கக் கூடாது. பொதுப்பணித் துறையில் பிரிவு நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் பட்ட பொறியாளர்களை மட்டும் பணி அமர்த்தி துறை திட்டங்களை நவீன யுக்தியுடன் நிறைவேற்றிட உரிய ஆணை வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுப்பணித் துறையையும், பொறியாளர்களின் பணி நலன்களை மேம்படுத்த பொறியியல் சீர்திருத்தக் குழு அமைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுப்பணித் துறையில் திட்ட பணிகளை விரைந்து நடத்திட தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் உதவிப் பொறியாளர் சிவில் மற்றும் மின்னியல் காலியிடப் பணிகளை ஒவ்வோர் ஆண்டும் தவறாது நிரப்ப ஆவன செய்ய வேண்டும்.
பொதுப்பணித் துறையில் ஓய்வுபெற விருக்கும் எந்தவொரு ஒரு தலைமைப் பொறியாளருக்கு பணி நீட்டிப்போ அல்லது மறுபணியமர்வு ஆணையோ வழங்க வேண்டாம் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.