மேச்சேரி, ஜலகண்டபுரத்தில் சாலை மறியல்
By DIN | Published On : 26th May 2019 05:00 AM | Last Updated : 26th May 2019 05:00 AM | அ+அ அ- |

மேட்டூரை அடுத்த மேச்சேரி, ஜலகண்டபுரத்தில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சின்ன அரங்கனூரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு காடையாம்பட்டி கூட்டு குடிநீர் திட்டத்தில் காவிரி குடிநீர் வழங்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக வாரம் ஒரு நாள் மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. பலமுறை ஊராட்சி ஒன்றிய அலுவலரிடம் முறையிட்டும் போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
கடும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக சனிக்கிழமை சின்ன அரங்கனூருக்கு வந்த அரசுப் பேருந்தை கிராம மக்கள் காலி குடங்களுடன் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு மேச்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் குடிநீர் விநியோகத்தை சீராக்குவதாக உறுதி அளித்ததால் போராட்டத்தை கிராம மக்கள் கைவிட்டனர்.
இதேபோல் ஜலகண்டபுரத்தை அடுத்த கட்டினாய்க்கன் பட்டியில் கடந்த இரண்டு மாதங்களாக குடிநீர் விநியோகம் சீராக இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் சனிக்கிழமை காலை ஜலகண்டபுரம் இடைப்பாடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த ஆவடத்தூர் ஊராட்சி செயலாளர் ஞானதுரை போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு நடத்தி குடிநீர் விநியோகத்தை சீராக்குவதாக உறுதியளித்தார். அதன் பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.