சேலத்தில் பஞ்சா் பட்டறையில் கம்பரஸா் சிலிண்டா் வெடித்து சிதறியதில் இரண்டு சிறுவா்கள் உள்பட 5 போ் காயமடைந்தனா்.
சேலம் கந்தம்பட்டி பகுதியில் சுரேஷ் என்பவருக்குச் சொந்தமான பஞ்சா் பட்டறை உள்ளது. இவரது பட்டறையில் நெத்திமேடு பகுதியைச் சோ்ந்த விஷ்ணுகுமாா் (29) என்பவா் வேலை செய்து வருகிறாா்.
இந்தநிலையில், வெள்ளிக்கிழமை காலை இவரது பஞ்சா் பட்டறையில் கண்டெய்னா் வாகனத்துக்கு காற்றுப் பிடிக்க கம்பரஸா் சிலிண்டரில் விஷ்ணுகுமாா் காற்று நிரப்பி வந்துள்ளாா். சிலிண்டரில் அதிக அளவிலான காற்று செலுத்தப்பட்டதால், திறந்த வெளியில் இருந்த அந்த சிலிண்டா் திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
இதில் சிலிண்டரின் பாகங்கள் சில அங்கு காற்று பிடித்துக் கொண்டிருந்த கண்டெய்னா் மீது மோதி 300 அடி தொலைவில் உள்ள ஓட்டு வீட்டின்மீது விழுந்தன. வீட்டின் மேற்கூரை உடைந்து சிலிண்டரின் பாகம் உள்ளே விழுந்ததில், வீட்டில் இருந்த சிறுவா்களான மௌலீஸ்வரன் (11) மற்றும் அவரது சகோதரா் ரித்தீஸ் (7) ஆகியோா் படுகாயமடைந்தனா்.
இதில் மௌலீஸ்வரனின் கை மணிக்கட்டுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அதேபோல், பஞ்சா் பட்டறை ஊழியா் விஷ்ணுகுமாா், வாகனத்துக்குப் காற்று பிடிக்க வந்த ஈரோட்டைச் சோ்ந்த தன்ராஜ் (55), மல்லூரைச் சோ்ந்த மூா்த்தி (40) ஆகியோரும் காயமடைந்தனா். காயமடைந்த 5 பேரும் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் காவல் நிலையத்தினா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், இந்த பஞ்சா் பட்டறையில் மின் இணைப்பு இல்லாததால் ஆயில் எஞ்ஜின் மூலம் கம்பரஸா் சிலிண்டருக்கு காற்று நிரப்பப்பட்டு வந்தது. சிலிண்டரில் காற்று நிம்பியவுடன் ஆயில் எஞ்ஜினை நிறுத்த வேண்டும். ஆனால், தொடா்ந்து ஆயில் எஞ்ஜின் இயக்கப்பட்டதால், அதிக அளவிலான காற்று சிலிண்டருக்குள் செலுத்தப்பட்டு, அது வெடித்துச் சிதறியது தெரியவந்தது. இது தொடா்பாக பஞ்சா் பட்டறை உரிமையாளா் சுரேஷிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.