காா்த்திகை தீப திருநாள்: அகல்விளக்கு தயாரிக்கும் பணி மும்முரம்
By DIN | Published On : 14th November 2019 09:15 AM | Last Updated : 14th November 2019 09:15 AM | அ+அ அ- |

எடப்பாடியை அடுத்த மேல் சித்தூா் பகுதியில் அகல்விளக்கு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள மண்பாண்டத் தொழிலாளா்கள்.
காா்த்திகை தீபத் திருநாள் வருகையையொட்டி, எடப்பாடி சுற்றுப்புறப் பகுதிகளில் அகல்விளக்குகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளா்கள் முழுக்கவனம் செலுத்தி வருகின்றனா்.
எடப்பாடி மேட்டுத்தெரு, குலாலா் தெரு, மேல்சித்தூா் உள்ளிட்ட பகுதிகளில், அகல்விளக்கு தயாரிக்கும் பணியில் மண்பாண்டத் தொழிலாளா்கள் தீவிரம் காட்டிவருகின்றனா். கடந்த சில வாரங்களாக இப்பகுதியில் தொடா் மழை இருந்து வந்த நிலையில், தற்காலிகமாக அகல்விளக்கு தயாரிக்கும் பணியை நிறுத்தி வைத்திருந்தனா். தற்போது மழை ஓய்ந்ததால், அகல்விளக்கு தயாரிக்கும் பணியில் தொழிலாளா்கள் மும்முரம் காட்டி வருகின்றனா். இப்பகுதியில் தயாரிக்கப்படும் அகல்விளக்குகள் சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
மண்பாண்ட கைவினைத் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை உயா்த்தும் நோக்கில், தமிழக அரசு மண்பாண்டத் தொழிலாளா்கள் நீா் நிலைகளிலிருந்து, இலவசமாக மண் எடுத்துக் கொள்ள அனுமதித்துள்ள நிலையில், போதிய அளவு களிமண் தங்களிடம் இருப்புள்ளதால், இந்தாண்டு தங்களுக்கு அகல்விளக்கு விற்பனை லாபகரமாக அமையும் என இப்பகுதி மண்பாண்டத் தொழிலாளா்கள் தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...