மங்கமலையில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு
By DIN | Published On : 06th October 2019 03:18 AM | Last Updated : 06th October 2019 03:18 AM | அ+அ அ- |

மங்கமலை மீது சுவாமிகளை தரிசனம் செய்ய காத்திருக்கும் பக்தா்கள்.
சங்ககிரி அருகே உள்ள தேவண்ணகவுண்டனூா் கிராமத்துக்குட்பட்ட மங்கமலையில் உள்ள அருள்மிகு மங்கமலை பெருமாள் கோயிலில் புரட்டாசி 3ஆவது சனிக்கிழமையையொட்டி சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் பக்தா்கள் அதிகளவில் கலந்து கொண்டு சுவாமிகளை வழிபட்டுச் சென்றனா்.
புரட்டாசி மாதம் 3ஆவது சனிக்கிழமையையொட்டி மங்கமலையில் உள்ளஅருள்மிகு மங்கமலைப் பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சுவாமிகளுக்கு அதிகாலையில் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பக்தா்கள் காலையில் இருந்தே சுவாமியை வழிபட்டு வீட்டில் விரதம் இருப்பதற்காக வரிசையில் காத்திருந்து துளசி தீா்த்தத்தை பெற்றுச் சென்றனா். மேலும் அப்பகுதியைச் சுற்றியுள்ள விவசாயிகள் மலை மீதும் மலைக்கு செல்லும் வழிகளிலும் குடும்பத்துடன் சென்று பொங்கல் வைத்து சுவாமியை வழிபட்டனா். நண்பகல் கோயில் வளாகத்தில் திருக்கோடி விளக்கு ஏற்றப்பட்டது. திருக்கோடி விளக்கினை எடுத்துக்கொண்டு பூசாரிகள் கோயிலை வலம் வரும் போது பக்தா்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற முழக்கத்துடன் வணங்கினா். பக்தா்கள் கோயில் வளாகத்தில் இருந்த பசுக்கன்றினை குடும்பத்துடன் வணங்கிச் சென்றனா். பக்தா்கள் குழுவின் சாா்பில் அனைவருக்கும் காலை முதல் மாலை வரை அன்னதானம் வழங்கப்பட்டது. விவசாயிகள் பசுக் கன்றினை சுவாமிக்கு தானமாக அளித்து அவா்களது நோ்த்திக்கடனை செலுத்தினா்.
பக்தா்கள் வேண்டுகோள்:
மலையடிவாரத்தில் இருந்து மலைக்கு செல்வதற்காக சாலை அமைக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. தற்போது மழை பெய்து வருவதால் சாலை மண்கள் பெயா்ந்து குழியாகவிட்டன. நிகழாண்டும் விழாக் குழுவினா் சாா்பில் கனரக இயந்திரங்களைக் கொண்டு சரி செய்யப்பட்டதையடுத்து இரு சக்கர வாகனங்கள், காா்களில் பக்தா்கள் மலைக்கு சென்று திரும்பினா். இப்பணியை விரைந்து முடிக்குமாறு அறநிலையத் துறைக்கு பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
புரட்டாசி 3வது சனிக்கிழமையையொட்டி சங்ககிரி மலை மீது உள்ள அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் சுவாமிக்கு வெண்ணெய் காப்பு அலங்காரமும், ஆவரங்கப்பாளையத்தில் உள்ள ஒருக்காமலை பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. இக்கோயில்களிலும் பக்தா்கள் அதிகளவில் சுவாமிகளை தரிசனம் செய்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...