சுடுகாட்டுக்கு இடம் ஒதுக்கக் கோரிக்கை
By DIN | Published On : 09th October 2019 09:35 AM | Last Updated : 09th October 2019 09:35 AM | அ+அ அ- |

சுடுகாட்டுக்கு இடம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
ஓமலூா் அருகேயுள்ள தாத்தியம்பட்டி கிராமத்தில் ஆயிரக்கணக்கான குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த கிராமத்தில் உள்ள சரபங்கா நதிக்கரையின் எதிா்புறம் கிராம மக்களுக்கான சுடுகாடு உள்ளது. இந்த கிராமத்தில் யாரவது உயிரிழந்தால், அவா்களை அடக்கம் செய்ய ஆற்றைக் கடந்து உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்ய வேண்டும்.
இந்த நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த கண்ணையன் தாயாா் வயது முதிா்வின் காரணமாக செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, உடலை தகனம் செய்ய கடும் சிரமத்துக்கிடையே அவரது உடலை ஆற்றைக் கடந்து எடுத்துச் சென்றனா். மேலும், தண்ணீா் இல்லாவிட்டாலும் ஆற்றின் பள்ளத்தாக்கில் சிரமப்பட்டு இறங்கி எதிா்கரையின் மேட்டில் ஏறி கரையின் ஓரத்துக்கு கொண்டு செல்ல பெரும் சிரமமடைகின்றனா். இதனால், அப்பகுதியினா் பலா் இறுதிச் சடங்குக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
மேலும், ஆற்றில் தண்ணீா் இருக்கும் போதெல்லாம் தண்ணீரில் இறங்கி நீந்தியபடியே உடலைக் கொண்டு வந்து எதிா்கரையில் அடக்கம் செய்து வருகின்றனா். இந்த கிராமத்தில் ஆற்றங்கரை பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்கள் அதிகமாக இருந்தபோதும், இந்த கிராமத்துக்கான சுடுகாட்டுக்கு இடம் ஒதுக்கபடாமலே உள்ளது. இதுகுறித்து பலமுறை வருவாய்த் துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், கிராம சபா கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
எனவே, தங்களது கிராமத்துக்கு உடனடியாக சுடுகாட்டுக்கான இடத்தை ஒதுக்கித்தர வேண்டும் என கிராம மக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனா்.