இன்று முதல் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கூடுதல் அதிகாரம்
By DIN | Published On : 01st September 2019 06:00 AM | Last Updated : 01st September 2019 06:00 AM | அ+அ அ- |

தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் குறித்து ஆய்வு செய்ய அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வித் துறை அண்மையில் பிறப்பித்தது.
தமிழகம் முழுவதும் தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகள் என சுமார் 38 ஆயிரம் பள்ளிகள் உள்ளன. இவை அனைத்தும் தொடக்கக் கல்வித் துறை இயக்ககக் கட்டுப்பாட்டில் அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலர், கல்வி மாவட்ட அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக இயங்கிவந்தன.
இதில், தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளை ஒன்றியத்துக்கு இரு வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டும் வந்தன. இம் முறை கடந்த 1984 முதல் நடைமுறையில் இருந்து வருகிறது.
கல்வித் துறையில் நிர்வாக சீர்திருத்தம் செய்துவரும் தமிழக அரசு, தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளை ஆய்வு செய்ய ஒன்றியத்தில் ஒரு அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அனுமதி வழங்கியுள்ளது.அந்தந்த அரசு மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மேற்கண்டவாறு தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அனைத்து வகை அரசுப் பள்ளிகளையும் நாள்தோறும் கண்காணிப்பதுடன், அப் பள்ளிகளின் கற்றல்,கற்பித்தல் செயல்பாடுகளை ஊக்குவிக்கவும், உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் இத்தனை ஆண்டுகள் தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளை நிர்வகித்து வந்த வட்டாரக் கல்வி அலுவலர்கள் பணிகள் 90 சதவீதம் குறைத்து விடப்பட்டுள்ளது.
இனிமேல் வட்டாரக் கல்வி அலுவலர்கள் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களின் மாத சம்பளம், இதர பணப் பலன்களை மட்டும் வழங்கி வரலாம்.
ஆசிரியர் பயிற்றுநர்கள் கூறியது:
எங்களுக்கு தலைமை மட்டுமே மாறியுள்ளது. ஆனால் வழக்கமாக இதுவரை செய்துவரும் குறுவள மைய பள்ளிகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் அதே பணிதான். இந்த மாற்றத்தால் எங்களுக்குப் பாதிப்பில்லை என்றனர்.
வாரவிடுமுறை, விநாயகர் சதுர்த்தி விடுமுறை முடிந்து செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் இந்த உத்தரவை மேல் நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் செயல்படுத்துவர்.