குடிமராமத்துப் பணிகள்: ஆட்சியர் நேரில் ஆய்வு
By DIN | Published On : 01st September 2019 05:54 AM | Last Updated : 01st September 2019 05:54 AM | அ+அ அ- |

கெங்கவல்லி, வீரகனூர் மற்றும் சொக்கனூர் ஆகிய ஏரிகளில் தமிழ்நாடு முதல்வரின் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிமராமத்துப் பணிகளை சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் இது குறித்து விவசாயிகளிடம் கலந்துரையாடியபோது அவர் தெரிவித்தாவது,
ஏரி, குளங்களை தூர்வாரி நீர் நிலைகளை மேம்படுத்தி மழைநீரை சேமித்திடும் வகையில் குடிமராமத்துத் திட்டத்தை அரசு அறிவித்துச் செயல்படுத்தி உள்ளதோடு, இக் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் நிகழ் ஆண்டு 2019-20 ரூ. 5.63 கோடி மதிப்பீட்டில் 20 குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ஆணையிட்டுள்ளார்.
முதல்வரின் ஆணையின்படி சேலம் மாவட்டத்தில் 20 குடிமராமத்துப் பணிகள் அந்தந்த பாசனதார சங்கங்களின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இக் குடிமராமத்துப் பணிகளுக்கு அரசு ஒதுக்கீடு செய்துள்ள நிதியோடு விவசாயிகள் அல்லது ஆயக்கட்டுக்காரர் சங்கங்களின் 10 சதவீத பங்களிப்புடன் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் வரத்து கால்வாய்கள் புனரமைக்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் இக் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன.
சேலம் மாவட்டத்தில் பொதுப்பணித் துறை, நீர்வள ஆதாரத் துறையின் சரபங்கா வடிநிலக் கோட்டத்துக்குள்பட்ட 9 ஏரிகள், 4 அணைக் கட்டுகள் புனரமைத்தல் பணிகளும் ஆணைமடுவு அணை மற்றும் கரியகோயில் அணை பகுதிகளில் அணுகுசால் புனரமைத்தல் உள்ளிட்ட 19 பணிகளும், மேட்டூர் அணைக் கோட்டத்தின் சார்பில் சங்ககிரி, மேட்டூர் கிழக்கு கரை கால்வாயின் கிளை வாய்க்கால் புனரமைக்கும் ஒரு பணி என மொத்தம் 20 பணிகள் குடிமராமத்து திட்டத்தின்கீழ் நிகழ் ஆண்டு நடைபெற்று வருகின்றன.
இன்று சேலம் மாவட்டம் கெங்கவல்லி,வீரகனூரில் உள்ள ஏரி முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் வீரகனூர் ஏரி பாசன விவசாயிகள் நலச் சங்கத்தின் மூலம் ரூ. 29.50 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் சொக்கனூர் ஏரியும் முதல்வர் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் சொக்கனூர் ஏரி ஆயக்கட்டுதாரர்கள் சங்கத்தின் மூலம் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்துப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இக் குடிமராமத்துப் பணிகளின்போது ஆற்றைத் தூர்வாரி கரைகள் பலப்படுத்துதல், அனைத்து செடி,கொடிகள், தாவரங்கள், மரங்களை வேரோடு அப்புறப்படுத்துதல், அணைகளை கான்கிரீட் கொண்டு பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளுதல், கல் கட்ட புற இணைப்புகளில் உள்ள சேதங்களை பழுது பார்த்தல், கழிவுகளை சரி செய்தல் நீரோட்ட தளத்தில் பழுது நீக்குதல், கலிங்கு வழிந்தோடிகளை புனரமைத்தல் மதகுகளை மறுகட்டுமானம் செய்தல் வாய்க்கால்களை புனரமைத்தல், தடுப்புச்சுவர் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஏரி, பாசனதாரர் சங்க உறுப்பினர்கள் சிறப்பாக குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்திட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இப் பணி ஆய்வின்போது பொதுப்பணித்துறை-நீர்வள ஆதாரத்துறையின் சரபங்கா வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் ஆர்.கெளதமன்,ஆத்தூர் வருவாய்க் கோட்டாட்சியர் எம்.துரை,பொதுப்பணித் துறை-நீர்வள ஆதாரத் துறையின் சரபங்கா வடிநிலக் கோட்ட உதவி செயற்பொறியாளர் வி. ராஜேந்திரன், உதவி பொறியாளர் சாந்தக்குமார் உள்பட பொதுத் துறையின் நீர்வள ஆதாரத்துறை அலுவலர்கள், வருவாய்த் துறை, ஏரி பாசனதாரர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.