கொங்கணாபுரம் கூட்டுறவு ஏல மையத்தில் ரூ.50 லட்சத்துக்குப் பருத்தி விற்பனை
By DIN | Published On : 01st September 2019 05:57 AM | Last Updated : 01st September 2019 05:57 AM | அ+அ அ- |

கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை மையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில், ரூ. 50 லட்சத்துக்குப் பருத்தி விற்பனை நடைபெற்றது.
ஏல மையத்துக்கு விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வந்திருந்த 2,450 பருத்தி மூட்டைகள், ரூ. 50 லட்சத்துக்கு விற்பனை
செய்யப்பட்டன.
வாரந்தோறும் சனிக்கிழமை அன்று கொங்கணாபுரம் பகுதியில் உள்ள திருச்செங்கோடு வேளாண்மை கூட்டுறவு விற்பனை மையத்தில் பருத்தி, எள் ஏலம் நடைபெற்று வருகிறது.
இந்த ஏல மையத்துக்கு தற்போது எள் வரத்துக் குறைவாக உள்ள நிலையில், ஏராளமான விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பருத்தியை இம் மையத்தில் நடைபெறும் பொது ஏலத்தில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
அதேபோல் விற்பனை மையத்தில் நடைபெறும் பொது ஏலத்தில் திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் ஏராளமான வியாபாரிகள் கலந்துகொண்டு, பருத்தியை மொத்தக் கொள்முதல் செய்து வருகின்றனர்.
சனிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில் சுமார் 2,450 பருத்தி மூட்டைகள் 400 லாட்டுகளாகப் பிரிக்கப்பட்டு,
கூட்டுறவுத் துறை அலுவலர்கள் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட்டது.
இதில் பி.டி. ரகப் பருத்தியானது குவிண்டால் ஒன்று ரூ. 5,360 முதல் ரூ. 5,960 வரை விற்பனையானது. சுரபி ரக பருத்தியானது குவிண்டால் ஒன்று ரூ. 5,950 முதல் அதிகபட்சமாக ரூ. 6,210 வரை விற்பனையானது. பி.டி. மற்றும் சுரபி ரகப் பருத்திகள், கடந்த வாரத்தை விட தற்போது சற்றே விலை உயர்வு கண்டுள்ளதாக விவசாயிகள் கூறினர்.
நாள் முழுவதும் நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ. 50 லட்சத்துக்குப் பருத்தி வணிகம் நடைபெற்றது.