விநாயகர் சதுர்த்தி குடில்களுக்கு தற்காலிக மின் இணைப்பு பெறலாம்
By DIN | Published On : 01st September 2019 05:53 AM | Last Updated : 01st September 2019 05:53 AM | அ+அ அ- |

ஓமலூர் வட்டாரப் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடும் நிலையில் ஆங்காங்கே வைக்கப்படும் விநாயகர் சிலைகளுக்கு தற்காலிக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தும் பக்தர்கள் மின்சார வாரியத்தை அணுகி பாதுகாப்பான மின் இணைப்பைப் பெற்று விநாயகருக்கு மின் விளக்குகளால் அலங்காரம் செய்து வழிபடலாம்.
விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ள குடில்களின் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்த பின்னர் விநாயகர் சிலைகளுக்கு தற்காலிக மின் விநியோகம் செய்யுமாறு, பிரிவு அலுவலக பொறியாளர்களை மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது. தமிழக மின் வாரியம், கட்டுமானம் மற்றும் திருவிழா போன்றவற்றுக்கு தற்காலிக மின் இணைப்பு வழங்குகிறது. அவ்வாறு வழங்கப்படும் தற்காலிக மின் இணைப்பு யூனிட்டுக்கு 11 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந் நிலையில், செப் 2-ஆம் தேதி நாடு முழுதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவோர், முறைப்படி மின் விநியோக அனுமதி கேட்டால் பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்து, அவர்களுக்கு மின் திருட்டில் ஈடுபடாததை உறுதி செய்து, தற்காலிக பிரிவில் மின் விநியோகம் செய்யுமாறு பொறியாளர்களை மின் வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
இதைத் தொடர்ந்து விநாயகர் சிலை வைக்கும் குடில்களுக்கு தற்காலிக மின் இணைப்பு வழங்க ஓமலூர் கோட்ட மின்சார வாரிய இயக்கமும் பராமரிப்பும் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதனால், விநாயகர் சிலை வைக்கும் மக்கள் தற்காலிக மின் இணைப்பைப் பெற அலுவலகத்தை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.