சேலம் உருக்காலையைப் பாதுகாக்க பொதுமக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்: ஆர்.மோகன் குமாரமங்கலம்
By DIN | Published On : 11th September 2019 10:14 AM | Last Updated : 11th September 2019 10:14 AM | அ+அ அ- |

சேலம் உருக்காலையைப் பாதுகாக்க பொதுமக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் ஆர்.மோகன் குமாரமங்கலம் பேசினார்.
சேலம் உருக்காலை தனியார் மயமாக்கலைக் கண்டித்து, 37-ஆவது நாளாக காலவரையற்ற காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனிடையே, தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் ஆர்.மோகன் குமாரமங்கலம் இப்போராட்டத்தில் பங்கேற்று, உருக்காலைத் தொழிலாளர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
பின்னர் அவர் பேசியது: சேலம் உருக்காலை பொதுத் துறை நிறுவனமாக, அரசு நிறுவனமாக செயல்படுவதற்கு என்றும் உறுதுணையாக இருப்பேன். சேலம் உருக்காலை ரூ.2 ஆயிரம் கோடி கடனுக்காக ரூ.100 கோடி வட்டி கட்ட வேண்டியுள்ளது. இந்த ரூ.100 கோடி வட்டியைக் கட்ட ஒட்டுமொத்த நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்ப்பது எந்த வகையிலும் நியாயம் கிடையாது.
தனியார் துறையை ஊக்குவிப்பதன் மூலம் வேலைவாய்ப்பு உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. ஆனால், சேலத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனமான உருக்காலையை தனியார்மயப்படுத்தக் கூடாது. சேலம் உருக்காலை பொதுத்துறை நிறுவனமாக செயல்படுவதற்கு அனைத்து மக்களும் ஒன்றிணைந்து மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டு, உருக்காலையைப் பாதுகாக்க வேண்டும் என்றார்.
இந்தப் போராட்டத்தில், சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் எஸ்.கே.அர்த்தனாரி, பொதுக்குழு உறுப்பினர்கள் கருப்பூர் முருகேசன், ஜெயராமன், முன்னாள் விவசாயப் பிரிவு நிர்வாகி ஜே.பி.கிருஷ்ணா, ஓபிசி பிரிவு நிர்வாகிகள் வெங்கடேஷ், கௌதம், கார்த்திக் மற்றும் உருக்காலை தொழிற்சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.