சேலம் வந்தடைந்தார் முதல்வர்
By DIN | Published On : 11th September 2019 10:14 AM | Last Updated : 11th September 2019 10:14 AM | அ+அ அ- |

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை இரவு சேலம் வந்தடைந்தார்.
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து, துபை ஆகிய நாடுகளில் கடந்த 10 நாள்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இந்த நிலையில், வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு செவ்வாய்க்கிழமை அதிகாலை சென்னை வந்தடைந்தார்.
செவ்வாய்க்கிழமை மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் சேலம் வந்தடைந்தார். சேலத்தில் புதன்கிழமை காலை நடைபெறவுள்ள கட்சி நிர்வாகி இல்லத் திருமண விழாவில் முதல்வர் கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது. இந்த விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இதையடுத்து, முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி புதன்கிழமை மாலை கோவை சென்று, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்வார் என அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.