பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு
By DIN | Published On : 29th September 2019 03:53 AM | Last Updated : 29th September 2019 03:53 AM | அ+அ அ- |

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமையையொட்டி, சேலத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி, புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையொட்டி, சேலம் கோட்டை பெருமாள் கோயிலில் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேகமும் நடைபெற்றது. ஆஞ்சநேயருக்கு துளசி மாலை அலங்காரம் செய்து பட்டாடை அணிவிக்கப்பட்டது.
கருடாழ்வார், ஆண்டாளுக்கு பூ மற்றும் நகையால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு தரிசனம் செய்த பக்தர்களுக்கு பொங்கல், புளியோதரை, தயிர், எலுமிச்சை சாதம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டன.
இதேபோல் செவ்வாய்ப்பேட்டை பாண்டுரங்கநாதர், பிரசன்ன வெங்கடாசலபதி, கடைவீதி வேணுகோபாலசுவாமி, ஆனந்தா இறக்கம் லட்சுமி நாராயண சுவாமி, பட்டைகோயில் வரதராஜ பெருமாள், சின்னதிருப்பதி வெங்கடேசப் பெருமாள், உடையாப்பட்டி சென்றாயப்பெருமாள், நாமமலை வெங்கடேசப் பெருமாள், கூசமலை பெருமாள், நெத்திமேடு கரியபெருமாள் கோயில் உள்பட மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார ஆராதனை நடைபெற்றது.