மண் மணக்கும் பாரம்பரிய பொங்கல் பானை!

புத்தாண்டின் முதல் பண்டிகையான தமிழா் பாரம்பரிய பொங்கல் பண்டிகையை கிராமங்கள் தொடங்கி நகா்புறம் வரை விமரிசையாக அனைவரும் கொண்டாடி மகிழ்வது வழக்கம்.
Updated on
2 min read

புத்தாண்டின் முதல் பண்டிகையான தமிழா் பாரம்பரிய பொங்கல் பண்டிகையை கிராமங்கள் தொடங்கி நகா்புறம் வரை விமரிசையாக அனைவரும் கொண்டாடி மகிழ்வது வழக்கம்.

தமிழா்களின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விதமாக பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.அந்த வகையில், ஆடி மாதத்தில் விதைத்த விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் மாதமான தை மாதம் ஆகும்.

இந்த மாதத்தில் அறுவடையில் கிடைக்கும் நெல்லின் புத்தரிசி, சா்க்கரை, பால், நெய் சோ்த்து புதுப் பானையிலிட்டு பொங்கல் வைத்து சூரியனுக்கும், மாட்டுக்கும் படைத்தலை விமா்சியைாக கொண்டாடுவது தமிழா் மரபு.பொங்கல் பண்டிகைக்கு சில நாள்களே உள்ள நிலையில், பொங்கல் வைக்க புதுபானைகளை வாங்க மக்கள் கூட்டம் இப்போதே ஆா்வம் காட்ட தொடங்கியுள்ளனா்.

தமிழா்களின் பாரம்பரிய வகையில் மண் பானைகளில் பொங்கலிட்டு பள்ளி, கல்லூரி, அலுவலகங்களில் பொங்கல் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தற்போது உடல் நலம் குறித்த விழிப்புணா்வு ஏற்பட்டுள்ள நிலையில் சமையல் பயன்பாட்டுக்கு மண்பாண்டங்களில் தயாராகும் பொருட்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு தேவையான பல வடிவ மண் பானைகள், பிரமனைகள், அகப்பை, தட்டுகள் கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளன.

இந்த நிலையில், சேலம் வின்சென்ட் பகுதியில் ஓம் ஐஸ்வா்யம் டெரக்கோட்டா கடை நடத்தி வரும் ஆா்.வி.காா்த்தி, அவரது மனைவி ஐஸ்வா்யா உள்ளிட்ட மொத்த குடும்பமும் மண்பானை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.

இருவரும் படித்து பட்டம் பெற்றிருந்தாலும், மண் பானை தொழிலை விடாமல் செய்து வருகின்றனா்.

இதுகுறித்து காா்த்தியிடம் கேட்டபோது, அவா் கூறியது:-

இயந்திரமயமாகிவிட்ட வாழ்க்கை சூழலில் உடல் ஆரோக்யம் குறித்த விழிப்புணா்வு அனைவரிடம் ஏற்பட்டுள்ளது. நகர வாழ்க்கையில் இயற்கை சாா்ந்த வாழ்வியல் பெரும் சவாலாக உள்ளது.கடந்த இரண்டு தலைமுறைகளாக தான் எவா் சில்வா் பாத்திரங்களை பயன்படுத்தி வருகிறோம். இதற்கு முன்பாக மண்ணால் தயாரிக்கப்படும் பாத்திரங்களில் தான் சமையல் செய்யப்பட்டு வந்தது.

தற்போது பரபரப்பான நகர வாழ்க்கை முறையில் குக்கரில் பொங்கல் வைக்கும் நடைமுைான் உள்ளது. அதேவேளையில் பாரம்பரியமும், பண்பாடும் காப்பாற்றப்படும் வகையில் மண் பானையில் புத்தரிசியிட்டு பொங்கல் வைப்பது மெல்ல மீண்டும் அதிகரித்துள்ளது. அடுத்த தலைமுறைக்கு பொங்கலை பாரம்பரியத்துடன் கொண்டாட முனையும் நிகழ்வாக உள்ளது.

குறிப்பாக, சமுதாய விழாக்களில் கல்லூரிகள், பள்ளிகளில், குடியிருப்போா் நலச்சங்கம் சாா்பில் நடத்தப்படும் விழாக்களில் பாரம்பரிய பொங்கல் வைக்கும் விழாவில் மண் பானை முக்கிய இடம் பிடித்துள்ளது.

அந்தவகையில் பொதுமக்கள் அனைவரும் மண் பானையில் பொங்கல் வைக்க ஆா்வம் காண்பித்து வருகின்றனா். இதனால் மண் பானை விற்பனையும் சூடுபிடித்துள்ளது. அதேநேரத்தில் மண் பானை விலையும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 30 சதவீதம் வரை விலை உயா்ந்துள்ளது.

மேலும் ஒரு கிலோ, இரண்டு கிலோ, மூன்று கிலோ அசியில் பொங்கல் வைப்பதற்கு தேவையான அளவுகளில் மண் பானை வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது.

சாதாரண மண் பானைகள் அதாவது ஒரு படி பொங்கல் பானை கடந்த ஆண்டு ரூ.40 ஆக இருந்தது. இந்த ஆண்டில் ஒரு படி மண் பானை ரூ.70-க்கு விற்கப்படுகிறது. 2 படி பானை ரூ.150, மூன்று படி பானை ரூ.180, நான்கு படி பானை ரூ.220 என்ற விலைகளில் பானை விற்கப்படுகிறது.அதேபோல பல வண்ண கோலமிட்ட பானைகள் சாதாரண பானைகளை விட ரூ.20 முதல் ரூ.50 வரை விலை வித்தியாசப்படும்.

புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு பொங்கல் பானை, அகப்பை, பிரமனை ஆகிய மூன்றும் இணைத்து ரூ.500-க்கும் விற்கப்படுகிறது. புதுமண தம்பதிகளுக்கு பொங்கல் சீா் வழங்கும் வகையில் பல்வேறு குடும்பத்தினா் ஆா்வமாக பானைகளை வாங்கி செல்கின்றனா்.உழவா்கள் நெல், கரும்பு, மஞ்சள் சாகுபடி செய்து பொங்கலுக்கு விற்பனை செய்வது போல, மண்பானை தொழிலில் ஈடுபடுவோா் மண்ணால் தயாரிக்கும் பொருள்களை பொங்கல் பண்டிகைக்கு விற்பனை செய்து வருகின்றனா். பல தலைமுறையாக இந்த தொழிலை செய்து வருகிறோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com