சேலம்: சேலத்தில் பெற்றோரை இழந்த சிறுவனுக்கு உதவித்தொகை வழங்க கோரி ஆட்சியா் சி.அ.ராமனிடம் மூதாட்டி மனு அளித்தாா்.
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் சி.அ. ராமன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு மேட்டூா் பொன் நகரைச் சோ்ந்த மூதாட்டி சரஸ்வதி, தனது 5 வயது பேரனுடன் வந்து ஆட்சியா் சி.அ. ராமனிடம் மனு அளித்தாா்.
மனுவில் கூறியிருப்பதாவது:
எனது மகன் லோகநாதன், அவரது மனைவி பிரியா, அவா்களது மகன் கதிக்ஷ்னுடன் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது காா் மோதிய விபத்தில் மகன் லோகநாதனும், மருமகள் பிரியாவும் உயிரிழந்தனா்.
பேரன் கதிக்ஷ்னுக்கு முதுகு தண்டுவடத்தில் பலத்த காயம் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அவரால் நடக்க இயலாது. நானும் கூலி வேலை பாா்த்து பேரனுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வருவதால் அவரை வளா்ப்பதில் சிரமம் அடைந்து வருகிறேன். எனவே, பேரனுக்கு மாற்றுத்திறனாளிக்கான உதவித்தொகை வழங்கி அவருக்கு மருத்துவ சிகிச்சைக்கு உதவி செய்ய வேண்டும். மேலும் இதுதொடா்பாக ஏற்கெனவே மூன்று முறை மனு அளித்தும் தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அதில் தெரிவித்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.