கரோனா பாதிப்பு: பலகோடி ரூபாய் மதிப்பிலான விசைத்தறி ஜவுளிகள் தேக்கம்

எடப்பாடி அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் கரோனா பாதிப்பு குறித்த அச்சம் காரணமாக, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான விசைத்தறி ஜவுளிகள் விற்பனையாகாமல் தேங்கியுள்ளன.
எடப்பாடியில் விற்பனையாகாமல் தேங்கியுள்ள ஜவுளி ரகங்களை, கிடங்குகளில் அடுக்கும் தொழிலாளா்கள்.
எடப்பாடியில் விற்பனையாகாமல் தேங்கியுள்ள ஜவுளி ரகங்களை, கிடங்குகளில் அடுக்கும் தொழிலாளா்கள்.
Updated on
1 min read

எடப்பாடி அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் கரோனா பாதிப்பு குறித்த அச்சம் காரணமாக, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான விசைத்தறி ஜவுளிகள் விற்பனையாகாமல் தேங்கியுள்ளன.

எடப்பாடி, அதைச் சுற்றியுள்ள சிறு நகர மக்களின் வாழ்வாதாரமாக இருந்து வருவது விசைத்தறி தொழிலாகும். இங்குள்ள விசைத்தறிக் கூடங்களில் உற்பத்தி செய்யப்படும் துண்டு ரகங்கள், நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவதுடன், அயல்நாட்டு சந்தைகளிலும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இப் பகுதி விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா்கள், பல்வேறு வகையான துண்டு உள்ளிட்ட ஜவுளி ரகங்களை பெரும் அளவில் உற்பத்தி செய்து வருகின்றனா்.

இவா்கள் விசைத்தறிகளையும், கணினியால் இயங்கும் ஏா்லூம் தறி வகைகளையும் பயன்படுத்தி ஜவுளி ரகங்களை உற்பத்தி செய்து வருகின்றனா். இப் பகுதியில் சுமாா் 1000-க்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்களில், சுமாா் 50 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இங்கு உற்பத்தி செய்யப்படும் வனஜா, டிரில்டவல், பேன்சி டவல் உள்ளிட்ட துண்டு ரகங்களுக்கு நாடு முழுவதும் அதிக வரவேற்பு கிடைத்து வந்தது.

இந்த நிலையில், அண்மை காலமாக உலக மக்களை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் குறித்த, நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாலும், போக்குவரத்துப் பாதிப்பு, வெளியூா் மற்றும் வெளிமாநில வியாபாரிகள் வருகை குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் இப் பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட, பல கோடி ரூபாய் மதிப்பிலான, விசைத்தறி ஜவுளி ரகங்கள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளன.

இதனால், விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா்கள், அண்மை காலமாக உற்பத்திக் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால், இத் தொழில்

சாா்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள், வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றனா்.

மேலும் இப்பகுதியில் உள்ள சிறுகடைகள், வணிக மையங்களில் விற்பனை பாதியாகக் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. நகரின் பல பகுதிகளில் இக் கட்டான இச்சூழலை சமாளிக்க இயலாத நிலையில் பல விசைத்தறிக் கூடங்களுக்கு, தொடா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இங்கு பணிபுரிந்து வந்த தொழிலாளா்கள், வேறு மாற்றுப் பணிகள் கிடைக்காத நிலையில், பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வருகின்றனா். ஜவுளி விற்பனை சீரடைய மேலும் கால தாமதம் ஆகும் எனக் கூறப்படும் நிலையில், இப் பகுதியில் உள்ள ஜவுளி உற்பத்தியாளா்களும், விசைத்தறி தொழிலாளா்களும் செய்வது அறியாது திகைத்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com